» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இயற்பியல் துறையைக் காக்க அரசு முன்வர வேண்டும்: அஸ்ட்ரோ கிளப் கூட்டத்தில் தீர்மானம்!

திங்கள் 11, மே 2026 3:31:07 PM (IST)



கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் இயற்பியல் துறையை மேம்படுத்தவும், பள்ளிப் பாடத்திட்டத்தில் வானவியலை முறைப்படுத்தவும் வலியுறுத்தி தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி (TASS) சார்பாக மதுரையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை குமரன் மஹாலில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மனோகர் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இயற்பியல் உள்ளிட்ட அறிவியல் துறைகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைத் தடுக்க உயர்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம் போன்ற பெருநகரங்களில் புதிய அறிவியல் மையங்களை உருவாக்க வேண்டும்.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை வானவியல் பாடத்திட்டத்தை முறைப்படுத்தி, ஆசிரியர்களுக்கு டெலஸ்கோப் உள்ளிட்ட கருவிகளுடன் முறையான பயிற்சி வழங்க வேண்டும். பெருநகரங்களில் வணிக நிறுவனங்களின் அதீத ஒளி விளக்குகளைக் கட்டுப்படுத்தி, ஒளி மாசுவை (Light Pollution) குறைக்க விதிகளை உருவாக்க வேண்டும்.

புத்தகத் திருவிழாவைப் போலவே மாவட்டத் தலைநகரங்களில் 'வானவியல் அறிவியல் திருவிழா' நடத்தப்பட வேண்டும். தமிழ் வழியில் வானவியல் புத்தகங்களை அரசு வெளியிட வேண்டும்.

வரும் அக்டோபர் மாதத்தில் மாநில அளவிலான 'இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டை' பிரம்மாண்டமாக நடத்தவும், அமைப்பின் செயல்பாடுகளைத் தமிழக முதல்வர் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு செல்லவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி தன்னார்வலர் லதாவிற்கு அஸ்ட்ரானமி கிட் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து 50-க்கும் மேற்பட்ட வானவியல் ஆர்வலர்கள் இதில் பங்கேற்றனர். மதுரை மாவட்ட அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory