» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே ஆதரவு: எஸ்.பி. வேலுமணிக்கு மெஜாரிட்டி?

திங்கள் 11, மே 2026 3:32:01 PM (IST)

17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இன்று காலை தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில் அதிமுக உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதில் சி.வி. சண்முகம் தவிர மற்ற அனைத்து அதிமுக எம்.எல்.ஏ-க்களும் பதவியேற்றுக்கொண்டனர். அவை கூடியபோது இ.பி.எஸ் மற்றும் வேலுமணி தரப்பினர் தனித்தனி குழுக்களாக வந்து அமர்ந்தபோதே சலசலப்பு தொடங்கியது.

பேரவை சட்டப்பிரிவு விதிகளின்படி, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் குழுத் தலைவராகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுக்கக் கோரி தற்காலிக சபாநாயகரிடமும், பேரவைச் செயலரிடமும் கடிதம் வழங்கப்பட்டது. ஆனால், இந்தக் கடிதத்தில் தளவாய் சுந்தரம், ஓ.எஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 17 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 36 உறுப்பினர்கள் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி. வேலுமணியைச் சட்டப்பேரவை குழுத் தலைவராகவும், சி.வி. சண்முகத்தைத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்க அவர்கள் விருப்பம் தெரிவித்துக் கையொப்பமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பியுள்ளதால் அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி, ஆர். காமராஜ், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் சி.வி. சண்முகம் அவசர ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory