» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ பங்கேற்க தடை -உயர்நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் 12, மே 2026 12:57:38 PM (IST)

சட்டமன்ற நடவடிக்கைகளிலோ அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பிலோ திருப்பத்தூர் தவெக வேட்பாளர் பங்கேற்கத் தடை விதித்து என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பன், ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவசர வழக்கில், 'சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வாக்கை அந்த தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். அதனால், அந்த வாக்கை மீட்டு, நான் போட்டியிட்ட தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று முன்தினம் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை விசாரித்த நீதிபதிகள் எல்.விக்டோரியாக கவுரி, என்.செந்தில்குமார் ஆகியோர், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பெயரில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தேர்தல் முடிவுக்கு எதிராக தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியுமே தவிர, இதுபோல 'ரிட்' வழக்கு தாக்கல் செய்ய முடியாது. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.

இதைத்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு தொகுதியில் எண்ணப் பட்ட தபால் வாக்கை, வேறு தொகுதிக்கு அனுப்ப முடியாது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட தபால் வாக்கை பெற்று, மறு எண்ணிக்கை நடத்தக்கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை.

வழக்கமாக தபால் வாக்குகள், தொகுதி எண், பெயருடன் தான் அனுப்பப்படுகின்றன. அதனால் தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.ராஜ கோபாலன், 'மனுதாரர் போட்டியிட்ட திருப்பத்தூர் தொகுதி யில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர் தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது எந்த எதிர்ப்பும் மனுதாரர் தெரிவிக்கவில்லை. முடிவுகள் வெளியிடப் பட்ட பின் தேர்தல் ஆணையத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டதாக கூறுவது கற்பனையானது. தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை” என்று வாதிட்டார்.

பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறி யுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு. வாக்கு மாறி வந்தது குறித்து தேர்தல் அதிகாரியே தகவல் தெரிவித்திருக்கி றார். தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளது என் பதை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தால் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார். இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

உச்சகட்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில், திருப்பத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி, நாளை சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது. வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் (தவெக - 83,375, திமுக - 83,374) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய விடுமுறை கால அமர்வு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் பின்னணியில் உள்ள சில முக்கியத் தகவல்கள்:

ஒரே பெயர் குழப்பம்: தமிழகத்தில் சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் 'திருப்பத்தூர்' என்ற பெயரில் இரண்டு தொகுதிகள் உள்ளன. இதனால் தபால்துறை ஊழியரின் தவறால், தனது தொகுதிக்கு வரவேண்டிய ஒரு தபால் வாக்கு மற்றொரு திருப்பத்தூர் தொகுதிக்குத் தவறுதலாகச் சென்றுவிட்டதாகப் பெரியகருப்பன் வாதிட்டார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த ஒரு வாக்கு : அந்த ஒரு தபால் வாக்கு முறைப்படி கணக்கிடப்பட்டிருந்தால் தேர்தல் முடிவே மாறியிருக்கக்கூடும் என்பதால், இது ஒரு 'அரிதான வழக்கு' எனப் பெரியகருப்பனின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

நீதிமன்றத்தின் முடிவு: தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து விளக்கம் கேட்ட நீதிமன்றம், வழக்கின் தீவிரம் கருதி, அடுத்த உத்தரவு வரும் வரை சீனிவாச சேதுபதி சட்டமன்ற நடவடிக்கைகளிலோ அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பிலோ பங்கேற்கக் கூடாது எனத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory