» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக ஆட்சியின் உண்மை முகம் போகப் போக வெளிவரும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
திங்கள் 18, மே 2026 5:13:06 PM (IST)

திமுக என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல, அது ஒரு சமுதாய இயக்கம் என்பதால் தேர்தல் அரசியலில் தற்காலிகமாக வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் கொள்கை அரசியலில் திமுக என்றும் தோற்காது என்றும், தற்போதைய தவெக ஆட்சியின் உண்மை முகம் போகப் போகத்தான் மக்களுக்குத் தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைவர் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: "மணமகள் திருவாரூர், மணமகன் திருச்சி, திருமணம் நடப்பது தஞ்சாவூர் என ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களும் கூட்டணி அமைத்து இந்த விழாவை நடத்துகின்றன. யார் எந்தப் பக்கம் போனாலும், எந்த மாவட்டம் எந்த முடிவை எடுத்தாலும், டெல்டா பகுதி எப்போதுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம்தான் என்பதை மக்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
கழக வரலாற்றில், குறிப்பாக டெல்டா அரசியல் வரலாற்றில் பூண்டி கலைச்செல்வன் பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவரது வழியில் கலைவாணன், தம்பி கலைவேந்தன் என ஒட்டுமொத்த குடும்பமும் கழகத்திற்காகக் களத்தில் உழைத்து வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த குடும்ப விழாவில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் குறிப்பிட்டதைப் போல, திமுக வெறும் தேர்தல் இயக்கம் அல்ல. தேர்தலில் வெற்றி தோல்விகள் என்பது சகஜமானதுதான்; அது மற்ற கட்சிகளை வேண்டுமானால் பாதிக்கலாம். ஆனால் சமுதாய இயக்கமான திமுக, எப்போதுமே மக்கள் பணிகளைத் தொடர்ந்து செய்யும். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், தேர்தல் அரசியலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோமே தவிர, கொள்கை அரசியலில் திமுக என்றைக்குமே தோற்றது கிடையாது, தோற்கவும் மாட்டாது.
எனவே, கழக உடன்பிறப்புகள் அனைவரும் எப்போதும் போல தங்களது களப்பணியையும், மக்கள் பணியையும் தொய்வின்றித் தொடர வேண்டும். ஆளுங்கட்சியாக இருந்தபோது மட்டுமல்ல, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கப்போகும் நாமும், நமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்கத் தவறிய மக்களுக்கும் சேர்த்தே உழைப்போம். தமிழ்நாட்டிற்கு வரும் ஆபத்துகளைத் தடுத்து நிறுத்தி, மாநில உரிமைகளை நிச்சயம் காப்போம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இந்த 10 நாட்களிலேயே பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தற்போதைய புதிய ஆட்சியின் உண்மையான முகத்தை ஓரளவிற்கு உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். போகப் போக இன்னும் பல உண்மைகள் மக்களுக்குத் தெரியவரும். நமது தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது போல, சூரியன் ஒருபோதும் மறையாது. அது மறுபடியும் மிக வீரியமாக உதிக்கும், அதன் ஒளியில் தமிழ்நாடு மீண்டும் செழிக்கும்" என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் உத்தரவு: நகராட்சி பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி!
திங்கள் 18, மே 2026 8:20:54 PM (IST)

தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
திங்கள் 18, மே 2026 5:51:18 PM (IST)

கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் ராஜ் மோகன் அறிவிப்பு!
திங்கள் 18, மே 2026 5:05:02 PM (IST)

ரேஷன் கடை பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு: நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை!
திங்கள் 18, மே 2026 4:18:18 PM (IST)

மே 20-ல் வெளியாகிறது 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இணையதளங்களில் பார்க்கும் வழிமுறைகள்
திங்கள் 18, மே 2026 12:53:24 PM (IST)

மே 21-ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 18, மே 2026 11:16:08 AM (IST)


