» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆர்டிஐ: உரிய காலத்தில் தகவல் தராத மாநகராட்சி அலுவலருக்கு 10,000 ரூபாய் அபராதம்!

சனி 11, ஜூலை 2026 8:41:28 AM (IST)

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரருக்கு உரிய காலத்தில் தகவல் வழங்காத தூத்துக்குடி மாநகராட்சியின் அப்போதைய பொதுத் தகவல் அலுவலருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்துத் தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஈ.ஜீன் பிரபு என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் கடந்த 03.07.2023 அன்று தூத்துக்குடி மாநகராட்சியில் தகவல் கோரி மனு அளித்திருந்தார். இம் மனுவிற்கு உரிய காலத்திற்குள் தகவல் வழங்கப்படாததால், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை மாநில தகவல் ஆணையர் அபய் குமார் சிங் (ஓய்வு பெற்ற இகாப) முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஆணையத்தின் முந்தைய உத்தரவைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையரும் தற்போதைய பொதுத் தகவல் அலுவலருமான லெ.வெங்கட்ராமன் மற்றும் அப்போதைய பொதுத் தகவல் அலுவலரும் தற்போதைய திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையருமான சு.பாலசுந்தரம் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். மனுதாரருக்குத் தகவல்கள் பதிவு அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதற்கான நகல்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.
அப்போதைய பொதுத் தகவல் அலுவலர் சு.பாலசுந்தரம் தனது எழுத்துப்பூர்வ விளக்கத்தில், பணிச்சுமை காரணமாக உரிய காலத்திற்குள் பதில் வழங்க இயலவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், உரிய காலத்தில் தகவல் வழங்காததற்குக் கூறப்பட்ட இக் காரணத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனத் தகவல் ஆணையம் பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 20(1)-ன் கீழ் அப்போதைய பொதுத் தகவல் அலுவலர் சு.பாலசுந்தரத்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத் தொகையை அரசு கணக்குத் தலைப்பில் செலுத்திவிட்டு, அதுகுறித்த அறிக்கையுடன் வரும் 14.07.2026 அன்று ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகிச் சமர்ப்பிக்குமாறு மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்போதைய பொதுத் தகவல் அலுவலரும் அன்றைய தினம் நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory