» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா சதம் : உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியது நியூஸி.!!

வெள்ளி 6, அக்டோபர் 2023 10:07:54 AM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை போட்டிகள்  முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிளென் பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு  விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர். வில் யங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா திணறடித்தனர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்தை பவுண்டரிக்கும், சிக்ஸர்களுக்கும் விரட்டினர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். 

டெவான் கான்வே 121 பந்துகளில் 152 ரன்களுடனும் (19 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 123 ரன்களுடனும் (11 பவுண்டரிகள் , 5 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.36.2 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  உலகக் கோப்பையின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தனது உலகக் கோப்பை பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது நியூசிலாந்து அணி.

உலகக் கோப்பையின் முதல் போட்டி பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்தது.  1,32,000 நபர்கள் அமர்ந்து பார்க்கும் நரேந்திர மோதி மைதானத்தில் வெறுமனே 45,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்றதால் கூட்டமே இன்றி முதல்போட்டி நடந்து முடிந்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மெத்தனெமே இதற்கு காரணமென பலரும் இதனை பலரும் விமர்சித்துள்ளார்கள்.  இங்கிலாந்து ஆல் ரவுண்டர் டேனியல் வியாட், "மக்கள் கூட்டம் எங்கே?” என ட்வீட் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory