» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த ஐதராபாத் அணி: மும்பையை வீழ்த்தி அபாரம்!

வியாழன் 28, மார்ச் 2024 10:51:17 AM (IST)



ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த அணியாக ஐதரபாத் அணி சாதனை படைத்தது. 

17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதன் மூலம் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 277 ரன்கள் குவித்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாகும்.

இதனையடுத்து மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடினர். இருப்பினும் அவர்களால் இலக்கை நெருங்க முடியவில்லை. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது. இது ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது இன்னிங்சில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில், 'ஆடுகளம் இன்று பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் 277 ரன்கள் என்பது நீங்கள் எவ்வளவு நன்றாக பந்து வீசினாலும், வீசாவிட்டாலும் எதிரணி பேட்டிங் சிறப்பாக விளையாடியிருக்கிறது என்றுதான் அர்த்தம். எங்களுடைய பவுலர்கள் நன்றாகதான் பந்து வீசினார்கள். ஆனால் ஆடுகளம் கடினமாக இருந்தது. 500 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறோம் என்றால் எந்த அளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

நாங்கள் சில கட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் எங்களுடைய பவுலர்கள் இளம் வீரர்கள். அனுபவம் இல்லாதவர்கள். அவர் நிச்சயம் கற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்று ஆடுகளத்தில் நான் பார்த்ததை நிச்சயமாக ரசிக்கின்றேன். எங்களுடைய பேட்ஸ்மேன்களும் இன்று நன்றாகவே விளையாடினார்கள். திலக் வர்மா, ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் நல்ல தொடக்கத்தை எங்களுக்கு அளித்தார்கள்.

சில விஷயங்களில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தி சரியாக செய்ய வேண்டும். அதை செய்தால் நிச்சயம் நாங்கள் அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று விடுவோம். மபகா அதிக ரன்களை கொடுத்தாலும், நிச்சயம் அவருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அவர் இளம் வீரர் இதுபோன்ற மைதானங்களில் பார்வையாளர்கள் முன் அவர் விளையாடி இருக்க மாட்டார். அவர் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் நம்பிக்கை குறையாமல்தான் இருக்கின்றார்' என்று கூறினார்.

இந்த வெற்றிக்கு அதிவேகமாக அரை சதம் அடித்த ஐதராபாத் வீரர் என்ற சாதனை படைத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதால் கிடைத்த தன்னம்பிக்கைதான் தம்முடைய அதிரடியான ஆட்டத்திற்கு காரணம் என்று அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "இதை கடந்த பேட்டியிலும் நான் தெரிவித்தேன். உள்ளூர் போட்டிகள்தான் எங்களுக்கு அதிகமான தன்னம்பிக்கையை கொடுக்கிறது. அதை வைத்து களத்திற்கு சென்று வெளிப்படுத்துங்கள் என்பதே பேட்ஸ்மேன்களுக்கு என்னுடைய மெசேஜாகும். என்னுடைய திட்டம் அட்டாக் செய்வதாக இருந்தது. டிராவிஸ் ஹெட் போன்ற எனக்கு மிகவும் பிடித்த ஒருவருடன் சேர்ந்து பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அவரை நான் ரசிக்கிறேன். உன்னுடைய இடத்தில் பந்து வந்தால் அடி என்று அவர் என்னிடம் சொன்னார். எந்த இடமாக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பால் நான் மகிழ்கிறேன். நேற்று இரவு பிரையன் லாராவிடம் பேசியது எனக்கு அதிகமாக உதவியது. வலைப்பயிற்சியில் நான் பேட்டிங்கை விட பவுலிங்கில் அதிகமாக கவனம் செலுத்துகிறேன். எனவே பந்து வீச்சிலும் என்னுடைய சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்கிறேன்" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory