» சினிமா » செய்திகள்

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!

செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)



சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தில், இளையராஜாவின் காப்புரிமை விவகாரம் குறித்து வைக்கப்பட்ட நக்கல் காட்சிக்குத் தயாரிப்பு நிறுவனமான 'டிரீம் வாரியர் பிக்சர்ஸ்' பகிரங்கமாகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘கருப்பு’. சூர்யா ரசிகர்களின் பேராதரவோடும் பொதுமக்களின் பாராட்டுக்களோடும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியது. அக்காட்சியில், இளையராஜாவின் இசையில் உருவான ‘அலையோசை’ படத்தில் இடம்பெற்ற "போராடடா.. ஒரு வாள் ஏந்தடா...” என்ற புகழ்பெற்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதனைத் தொடர்ந்து, "இந்தப் பாடலை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்திவிட்டார்கள் என்று இளையராஜா காப்புரிமை கேட்டு வழக்குத் தொடுத்துவிட்டார்" என்று கதையை நகர்த்துவது போல நகைச்சுவையாக ஒரு காட்சி நீண்டிருக்கும்.

சமீபகாலமாகப் பல்வேறு திரைப்படங்களின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா காப்புரிமை நோட்டீஸ் அனுப்பி வரும் நிஜ விவகாரத்தை மையமாக வைத்து இக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இது இளையராஜாவின் தீவிர ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மூத்த கலைஞர் ஒருவரைத் திரைப்படத்தில் நக்கல் செய்துள்ளதாகக் கூறி, இணையத்தில் படக்குழுவிற்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்தன. மேலும், இக்காட்சிக்காகப் படக்குழு மீது இளையராஜா சட்டப்பூர்வமாக வழக்குத் தொடர வேண்டும் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.

சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இளையராஜாவிடம் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:    "மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு, 'கருப்பு' திரைப்படத்தில் தங்களின் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியைக் கடத்தும் நோக்கத்திற்காகக் கையாண்ட ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்குச் சிறிதளவும் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட இக்காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசைஞானியின் ரசிகர்களோ அல்லது பிறரோ மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

அஜித் ரசிகர்களும் வருத்தம்:

தயாரிப்பு நிறுவனத்தின் இந்த விளக்கம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படத்தில், "இவரு பெரிய அஜித்குமாரு.. முதுகுல குத்துறாங்களாம்.. அப்டின்னு கூடத்தான் ஒரு நக்கல் டயலாக் இருக்கு..." என்று அஜித்தை மறைமுகமாக விமர்சிப்பது போன்ற வசனமும் இடம்பெற்றுள்ளது. இளையராஜாவுக்குப் படக்குழு வருத்தம் தெரிவித்தது போல, அஜித் குறித்த வசனத்திற்கும் படக்குழு விளக்கம் அளிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருவதால் ‘கருப்பு’ திரைப்பட விவகாரம் கோலிவுட்டில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory