» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தவெக அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை வெளிப்படுத்தியுள்ளது: வைகோ புகழாரம்!
வியாழன் 18, ஜூன் 2026 3:32:37 PM (IST)

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசின் செயல் திட்டங்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதில் உரையாற்றிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிய அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்குப் பொதுமக்கள் பெரும் ஆதரவை அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டியிருப்பது முற்றிலும் உண்மையாகும்.
மதசார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை, சிறுபான்மையினர் மற்றும் மீனவர் நலன், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்பச் சமத்துவம், சமதர்மக் கோட்பாடுகளை நிலைநிறுத்த புதிய அரசு உறுதியாக இருப்பதை ஆளுநர் உரையில் பிரகடனம் செய்திருப்பது மிகுந்த நம்பிக்கை தருகிறது.
மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்ற பேரறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி, இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவதற்கு "வெற்றி தமிழகம்” என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் நீடிக்கும் என்று அறுதியிட்டுக் கூறியிருப்பதும், மாநில உரிமைகள் மற்றும் நதிநீர் உரிமைகளைப் பாதுகாக்கத் தவெக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று குறிப்பிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.
அரசு நிர்வாகத்தில் புறையோடிக் கிடக்கும் லஞ்ச ஊழல்களை அடியோடு ஒழிக்கவும், நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கனிம வளக் கொள்ளைகள் தடுக்கப்படும் என்றும், அரசின் வருவாயை அதிகரிக்க மதுபான உற்பத்தியாளர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த வரித் தொகையில் சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் அரசின் கருவூலத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இது புதிய அரசின் நிதி மேலாண்மை அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.
ஒன்றிய அரசு நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டி வந்தாலும், நிதிப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு முனைப்பாக உள்ளது. மேலும், அரசு இயந்திரம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும், தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறையில் எளிமையான அனுமதி வழங்கப்படும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும், போதைக் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும் மற்றும் இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு (சாதிவாரி கணக்கெடுப்பு) மேற்கொள்ளப்படும் போன்ற அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருப்பது ஒட்டுமொத்தமாகப் பாராட்டத்தக்கதாகும் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அமைப்புகளுக்குப் பயன்படுத்தத் தடை: தலைமை ரசிகர் மன்றம் அறிக்கை
ஞாயிறு 14, ஜூன் 2026 8:47:41 AM (IST)

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது! – அமைச்சர் என். ஆனந்த் அதிரடி உத்தரவு!
வெள்ளி 22, மே 2026 11:37:11 AM (IST)

மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:36:44 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

தமிழகத்தில் அமையவுள்ள புதிய ஆட்சிக்கு வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி திடீர் சிக்னல்!
சனி 9, மே 2026 3:44:29 PM (IST)

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி: விஜய்க்கு ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 11:43:27 AM (IST)


