» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து: கேரள அரசு அறிவிப்பு!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 4:33:27 PM (IST)
வயநாடு துயரம் எதிரொலியாக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலையில் சூரல்மலை, மேப்பாடு, முண்டக்கை ஆகிய 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மண்ணில் புதைந்தனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, 152 பேரின் நிலை தெரியவில்லை. 11வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்கிறது. பலியானவர்களில் சிலரின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்ததால், அவர்களின் டி.என்.ஏ.,வை வைத்து அடையாளம் காணும் பணிகள் நடைபெறுகிறது.
நிலச்சரிவில் சிக்கி இவ்வளவு உயிர்களை இழந்த சோகத்திற்கு இடையே கேரளாவில் செப்., 14 முதல் 17 வரை நடைபெற உள்ள ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்ய அம்மாநில சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து கேரள அரசு தரப்பில், வயநாடு நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நாளை (ஆகஸ்ட் 10ம் தேதி) நடைபெறவிருந்த நேரு டிராபி படகுப் போட்டியை கேரள அரசு ரத்து செய்திருந்தது.