» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கள்ளக்காதல் விவகாரம் : கணவரைக் கொன்று, உடலை சாக்கடையில் வீசிய பெண் யூடியூபர் கைது!

வியாழன் 17, ஏப்ரல் 2025 11:04:01 AM (IST)



அரியானாவில் கள்ளக்காதலனுடன் இருப்பதை நேரில் பார்த்ததால் கணவனை கொன்று கால்வாயில் வீசிய பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டார். 

அரியானா மாநிலம் ரிவாரி மாவட்டம் ஜோடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிணா (32). அவருக்கு ராஜஸ்தானின் பிவானி மாவட்டம் குஜ்ரான் பகுதியை சேர்ந்த பிரவின் (35) என்பவருடன் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு முகுல் என்ற 6 வயது மகன் உள்ளான்.

இந்த நிலையில் பிரவினை கடந்த மார்ச் 25-ந் தேதிக்கு பிறகு காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். அன்றைய தினம் இரவில் வேலை முடிந்து வந்த பிரவின், மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மறுநாள் முதல் அவரை காணவில்லை என்றும் புகாரில் கூறியிருந்தார். மேலும், மருமகளுக்கு சுரேஷ் என்ற நபருடன் நெருக்கம் இருந்ததாகவும், அவர்கள் மகனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் கூறி இருந்தார்.

இதையடுத்து ரவிணாவைப் பிடித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கொலைக்கான திடுக்கிடும் பின்னணி தெரியவந்தது.பிரவின், கல்குவாரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது. ரவிணா, யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டு வந்தார். இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்தார்.

அவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிடுவது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே சமூக வலைத்தளத்தின் மூலம் 1½ ஆண்டுகளுக்கு முன்பாக சுரேஷ் என்ற வாலிபருடன் ரவிணாவுக்கு நட்பு ஏற்பட்டது. அவரும் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுபவர் ஆவார்.

நாளடைவில் ரவிணா-சுரேஷ் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த மார்ச் 25-ந்தேதி சுரேஷ் ரவிணாவின் வீட்டுக்கு வந்து அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதை கண்டுபிடித்த பிரவின் ரவிணாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அன்று இரவே காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய ரவிணா திட்டமிட்டார். பிரவின் தூங்கிக் கொண்டிருந்தபோது கள்ளக்காதலன் சுரேசை வீட்டுக்குள் அழைத்து வந்து பிரவினை கழுத்தை நெரித்து கொன்று உள்ளனர். பின்னர் அவரது உடலை இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று பிவானி நகருக்கு வெளியே சாக்கடை கால்வாயில் வீசி உள்ளனர். 3 நாட்களுக்குப் பிறகு பிரவினின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பகுதியில் கிடைத்த சி.சி.டி.வி. காட்சிகளில் ஹெல்மெட் அணிந்த வாலிபருடன், ரவிணா செல்வதும் இருவருக்கும் இடையில் பிரவின் துணியால் சுற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிணா, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவரது கள்ளக்காதலன் சுரேஷ் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory