» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக பதிலடி!

வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது என்று குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தியதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்தது.

இந்தச் சூழலில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா். அப்போது, ‘குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ எனக் குறிப்பிட்ட அவா், ‘நாடாளுமன்றத்தைவிட மேலானதாக நீதிமன்றம் செயல்படுவதாக’ சாடினாா்.

ஜகதீப் தன்கரின் பேச்சு விமர்சனத்துக்குள்ளான நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஜகதீப் தன்கருக்கு கண்டனம் தெரிவித்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது. 

ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.

இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைக்குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்தியாவில் "சட்டத்தின் ஆட்சி" தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory