» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வருகை: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

திங்கள் 21, ஏப்ரல் 2025 12:13:02 PM (IST)



இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினனரை புதுடெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார்.

அமெரிக்க  துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகள் இந்தியா வந்துள்ளனர். விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஷெரட்டன் ஓட்டலில் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர் தங்குகின்றனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை, ஜே.டி. வான்ஸ் இன்று மாலை 6.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார். டெல்லியில் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி இன்று அவர்களுக்கு இரவு விருந்தளிக்கிறார்.

பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. "அக்ஷர்தாம் கோயிலில் மேம்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். எங்கள் குழுக்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க துணை அதிபரின் வருகை நிறைவடையும் வரை எங்கள் குழுக்கள் அங்கு இருக்கும்” என்று ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் ஒட்டுமொத்த பாதையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருகையை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இன்று இரவு ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்கின்றனர். அங்கு அவர்கள் ராம்பாஹ் பேலஸில் தங்குகின்றனர். நாளை அவர்கள் அமீர் கோட்டையை பார்வையிடுகின்றனர். ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நாளை மாலை இந்திய குழுவினருடன் ஜே.டி.வான்ஸ் ஆலோசனை நடத்துகிறார். இதில் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

நாளை மறுநாள் ஆக்ரா சென்று தாஜ்மஹாலை, வான்ஸ் குடும்பத்தினர் பார்வையிடுகின்றனர். ஷில்ப்கிராம் பகுதியில் உள்ள இந்திய கைவினைப் பொருட்கள் விற்கப்படும் திறந்தவெளி சந்தையையும் அவர்கள் பார்வையிடுகின்றனர். 24-ம் தேதி அன்று ஜெய்ப்பூரில் இருந்து ஜே.டி.வான்ஸ் அமெரிக்கா புறப்படுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory