» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுற்றிவளைத்து தாக்குதல்: 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொலை!
புதன் 23, ஏப்ரல் 2025 8:40:30 AM (IST)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப் பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு சுற்றுலா வருவார்கள். இந்த நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
பஹல்காம் மலைப் பாங்கான பள்ளத்தாக்கு மற்றும் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய ஊராகும். பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய இடம் என்பதால் ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப் படுகிறது. இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் உள்ளது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது என்பதால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.
சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமான இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வாடிக்கை. நேற்றும் பஹல்காமில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு இருந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அங்கு இறங்கி வந்தனர். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தங்கள் குடும்பத்தினர் குண்டு காயங்களுடன் தரையில் சரிந்து விழுந்ததைப் பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர். பயங்கரவாதிகளைப் பார்த்ததும் சுற்றுலா வழிகாட்டிகளும், குதிரைகளை சவாரிக்கு கொண்டு வந்த உள்ளூர்காரர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் சம்பவ இடம் நோக்கி விரைந்துள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயங்கர என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டரும் அனுப்பிவைக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பஹல்காம் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 13 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இறந்தவர்களில் ஒருவர் கர்நாடகாவை சேர்ந்த தொழில் அதிபர் சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் ராவ் என்று தெரியவந்தது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காம் அழகிய புல்வெளி, ரத்தக்கறை படிந்து அலங்கோலமானது. சுற்றுலாத்தலம் வெறிச்சோடியது. நேற்று நடந்த பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் 2019-ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த புல்வாமா தாக்குதலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் என்று தெரியவந்து உள்ளது.
முதல்வர் கண்டனம்
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இதுகுறித்து வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், "பொதுமக்கள் மீது சமீப ஆண்டுகளாக காணாத வகையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
நான் நம்பமுடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்துள்ளேன். எங்கள் சுற்றுலாப் பயணிகள் மீதான இந்த தாக்குதல் அருவருப்பானது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் மிருகங்கள், மனிதாபிமானமற்றவர்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி என்ற பெயரில், ஒரு வீடியோ ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. அதில் பலர் ரத்தக் காயங்களுடன் அசைவற்று கிடக்கும் காட்சிகள் உள்ளன. பல பெண்கள், தங்களுடன் வந்தவர்களை கதறி அழுதபடி தேடி அலையும் காட்சியும் உள்ளது.
பல ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு, சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் வேளையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும், அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் 2 வழித்தடங்களில் பஹல்காம் வழித்தடமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 38 நாள் அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் அதற்கான முன்னேற்பாடுகளை திட்டமிடும் வேளையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது அவர்களை திகைக்க வைத்துள்ளது.
மேலும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஜே.டி.வான்ஸ் நேற்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)

உண்மையுள்ள தேசபக்தன்Apr 23, 2025 - 09:58:58 AM | Posted IP 104.2*****