» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்: உச்சநீதிமன்றம்

திங்கள் 6, அக்டோபர் 2025 4:08:13 PM (IST)

செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டுமென்றால் தனி மனுவாக தாக்கல் செய்து நீதிமன்ற அனுமதியுடன் அமைச்சராகலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணமோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பணமோசடி புகார் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிவர்த்தை உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதனிடையே, அதிமுகவில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். அவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செயல்பட்டார். அதேவேளை, கடந்த 2023 ஜுன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி வீடு, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்குப்பின் அன்று இரவே சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட சில நாட்களில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.

அதேவேளை, செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்ற நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் பதவி அல்லது ஜாமீன் இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுமாறு செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தது. இதையடுத்து, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பணமோசடி தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பில் உள்ள சில கருத்துக்களை நீக்கி உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணையில் இருக்கும்போது குற்றஞ்சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிக்கக்கூடாது என கூற முடியாது என வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவர் அமைச்சராக இருந்ததால் சாட்சியக்களை கலைக்க நேரிடும். அவர் அமைச்சராக இல்லாததை கருத்தில் கொண்டே ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் அமைச்சராவதை நீதிமன்றம் தடுக்கவில்லை. நீதிமன்றம் அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம். 

ஆனால், அமைச்சராகும்போது சாட்சியங்களை கலைக்க முயற்சிப்பதாக புகார் வந்தால், ஜாமீன் விதிமுறைகளை மீறினார் செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யப்படும். செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டுமென்றால் தனி மனுவாக தாக்கல் செய்து நீதிமன்ற அனுமதியுடன் அமைச்சராகலாம் என்றார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை உள்பட அனைத்து தரப்பும் பதில் அளிக்க உத்தவிட்ட உச்சநீதிமன்றம் நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.


மக்கள் கருத்து

அதானே பணம்Oct 6, 2025 - 04:37:16 PM | Posted IP 162.1*****

நீதிபதிக்கு துட்டு கிடைக்கும். நம் நாட்டில் திருடர்கள், விளங்காத குற்றவாளிகளை அரசியல்வாதி ஆக்குவதும் கேவலம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory