» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியீடு!

செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:46:58 PM (IST)

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் கடுமையான நோய்களால் அவதிப்பட்டு வரும் தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கேரளாவில் தெரு நாய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறுவர்கள், முதியோர்கள் என அனைவரும் தெரு நாய்களின் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், ஆபத்தான தெரு நாய்களைக் கொல்லலாம் எனச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் மோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

கேரள அரசின் முக்கிய வழிகாட்டுதல்கள்:

இதற்கான புதிய வழிகாட்டுதல்களைக் கேரள உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ளது: சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியாத, கடுமையாகக் காயமடைந்த, வெறிநாய் கடித்ததால் பாதிக்கப்பட்ட (வெறிநோய்க்கான அறிகுறிகள் கொண்ட) அல்லது காரணமின்றி மனிதர்களையும் பிற விலங்குகளையும் தாக்கும் ஆபத்தான நாய்களை மட்டுமே கருணைக்கொலை செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தனிக் குழு அமைக்கப்பட வேண்டும். தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் அங்கீகரித்த மருந்தை நரம்பு வழியாகச் செலுத்தி மட்டுமே கருணைக்கொலை செய்ய வேண்டும். விஷம் கொடுத்தோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது.

பிடிபடும் நாய்களை 2 முதல் 3 நாட்கள் மறுவாழ்வு மையம் அல்லது தங்கும் இடத்தில் பராமரிக்க வேண்டும். அந்த நேரத்தில் தனிநபர்களோ அல்லது விலங்குகள் நல அமைப்புகளோ தத்தெடுக்க முன்வந்தால் அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

மற்ற நாய்களின் முன்னிலையில் கருணைக்கொலை செய்யக் கூடாது. கருணைக்கொலை செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டியது கால்நடை மருத்துவரின் பொறுப்பாகும்.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தங்களது அதிகாரப்பூர்வ கடமையை நேர்மையாக நிறைவேற்றும் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தொடர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகச் செயல்பட்டால் இந்த பாதுகாப்பு பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory