» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போப் பிரான்சிஸ் உடல் அடக்கம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட 160 நாட்டு தலைவர்கள் அஞ்சலி

ஞாயிறு 27, ஏப்ரல் 2025 11:10:03 AM (IST)



உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட 160 நாட்டு தலைவர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.

உலகம் முழுவதும் 140 கோடிக்கு அதிகமானோரை கொண்ட கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகள் தலைவராக வழிநடத்தியவர், போப் பிரான்சிஸ். முதுமை காரணமாக பல்வேறு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ், கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. அவரது மரணம் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

போப் ஆண்டவரின் உடல் எளிய மரப்பெட்டியுடன் இணைந்த துத்தநாக பெட்டியில் வைக்கப்பட்டு வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் கடந்த 23-ந் தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகின் பல நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்து அவருக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். கடந்த 3 நாட்களில் மொத்தம் 2½ லட்சத்துக்கும் அதிகமானோர் அஞ்சலி செலுத்தியதாக வாடிகன் நகரம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் மாலையுடன் பொதுமக்களின் அஞ்சலி நிகழ்ச்சி முடிவடைந்தது. பின்னர் போப் ஆண்டவரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது. முன்னதாக அவரது பதவிக்காலத்தில் அச்சிடப்பட்ட நாணயங்கள் ஒரு பையில் வைத்து போப் ஆண்டவர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் வைக்கப்பட்டது.

மேலும் அவர் போப்பாக தேர்வானது முதல் அவரது பணிக்காலம் குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு பக்க ஆவணம் (ரோஹிட்டோ) ஒன்றும் பெட்டிக்குள் வைக்கப்பட்டது. அதன் ஒரு பிரதி வாடிகன் ஆவணக்காப்பகத்தில் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புனித பீட்டர் சதுக்கத்தில் நேற்று காலை 10 மணிக்கு போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்குகள் தொடங்கின. அடக்க திருப்பலி உள்ளிட்ட சடங்குகளை கார்டினல் காலேஜ் (கர்தினால் குழு) டீன் ஜியோவானி பாட்டிஸ்டா ரே தலைமை தாங்கி நடத்தினார்.

அடக்க திருப்பலியில் தியானப்பாடல், புனிதர்களின் மன்றாட்டுமாலை போன்றவை இடம்பெற்றன. மேலும் கிழக்கு நாடுகளின் கத்தோலிக்க வழிபாட்டு சடங்குகள் கிரேக்க மொழியில் நடந்தன. இறுதிச்சடங்கில் கர்தினால் ஜியோவானி நிகழ்த்திய மறையுரையில் போப் பிரான்சிசின் பணிகளை சுட்டிக்காட்டி பாராட்டினார். குறிப்பாக புலம்பெயர்ந்த மக்களிடம் அவர் காட்டிய அக்கறையை எடுத்துரைத்தார்.

திறந்த மனதுடன் பழகிய போப் பிரான்சிஸ், ‘மக்களின் போப்’ என புகழாரம் சூட்டினார். புனித பிரான்சிஸ் அசிசியாரின் பெயரை சூட்டிக்கொண்டதுடன், அவரைப்போல ஏழைகள் மீது அன்பும், கருணையும் கொண்டிருந்ததாகவும் உணர்ச்சி வசத்துடன் குறிப்பிட்டார். 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த இறுதிச்சடங்குகளில் ஏராளமான உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

குறிப்பாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலெய், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்றனியோ குட்டரெஸ் என 160-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

உலகின் ஏழைகள், புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் என அதிகாரமற்றவர்களின் மீது கவனம் செலுத்தி அவர்களது குரலாய் இருந்த போப் பிரான்சிசின் இறுதிச்சடங்கில் உலகின் அதிகாரமிக்கவர்கள் பங்கேற்று கவுரவித்தது கவனிக்கத்தக்கது.

இறுதிச்சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்ததும் அவரது விருப்பப்படியே வாடிகனுக்கு வெளியே ரோம் நகரில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்வதற்காக அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் அந்த பேராலயத்துக்குள் உருவாக்கி இருந்த எளிய கல்லறையில் போப் பிரான்சிசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தனிப்பட்ட நிகழ்வாக நடந்த இந்த அடக்க நிகழ்வில் ஏழைகள், வீடற்றவர்கள், கைதிகள், திருநங்கைகள், அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள் சுமார் 40 பேர் கையில் ரோஜாப்பூக்களை ஏந்தி பங்கேற்றனர்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக கருதப்படும் இந்த பிரிவினர் மீது போப் பிரான்சிஸ் தனது பதவிக்காலம் முழுவதும் அன்பும், இரக்கமும் செலுத்தியதை நினைவுகூரும் விதமாக இந்த நிகழ்வுக்கு வாடிகன் ஏற்பாடு செய்திருந்தது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கிய போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு மற்றும் அடக்க நிகழ்வுகள் அனைத்தும் பகல் 1.30 மணியளவில் நிறைவடைந்ததாக வாடிகன் அறிவித்தது.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் முதலாவது போப், இயேசு சபையின் முதலாவது போப், பிரான்சிஸ் அசிசியாரின் பெயர் தாங்கிய முதல் போப் என பணிக்காலத்தில் பல்வேறு ‘முதல்’ சாதனையை கொண்டிருந்த போப் பிரான்சிஸ், தனது இறுதிச்சடங்கு மற்றும் அடக்க நிகழ்வுகளிலும் ஏராளமான ‘முதல்’களை கொண்டிருந்தார்.

அந்தவகையில் 120 ஆண்டுகளில் முதல் முறையாக வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்டவர், எளிய கல்லறை மற்றும் சவப்பெட்டியை தேர்ந்தெடுத்தவர், அடித்தட்டு மக்களின் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டவர் என பல்வேறு அரிய செயல்களை உலகுக்கு காட்டியுள்ளார்.

போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்காக ராணுவம் மற்றும் போலீசார் என 2,500-க்கு மேற்பட்ட படை வீரர்கள் வாடிகனில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் போப் ஆண்டவரின் இறுதி ஊர்வலம் நடந்த பாதையில் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு என உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

போப் ஆண்டவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதில் இருந்து 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி

தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. இருவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்று போப் பிரான்சிசுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதைப்போல கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்திருந்த 2½ லட்சத்துக்கும் அதிகமானோர் போப் பிரான்சிசுக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory