» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவின் 25 சதவீத கூடுதல் வரி அமலுக்கு வந்தது: இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு!
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:44:34 PM (IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த, இந்திய இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரி இன்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா தொடங்கிய போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபர் புதினுடன், மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளால் அந்நாட்டுக்கு பொருளாதார வளம் சேருகிறது என்றும் அது போரை ஊக்குவிக்கிறது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறது.
இதன்படி, 25 சதவீத கூடுதல் வரி உள்பட மொத்தம் 50 சதவீத வரியானது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என டிரம்ப் அரசு தெரிவித்தது. இந்திய இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரி தொடர்பான நோட்டீஸ் ஒன்றையும் அமெரிக்கா நேற்று பிறப்பித்தது. இந்த நடைமுறை இன்று (27-ந்தேதி) அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கான அலுவல்பூர்வ அறிவிப்பு ஒன்றை டிரம்ப் நிர்வாகம் நேற்று பிறப்பித்தது. இதன்படி, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும். அந்த அறிவிப்பில், ரஷியாவால் அமெரிக்காவுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக புதிய வரிவிதிப்புகள் அமல்படுத்தப்படும். இந்த கொள்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு இந்த வரி விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும், குஜராத்தில் நிகோல் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மக்களிடையே பிரதமர் மோடி பேசும்போது, எவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்தபோதும், அதில் இருந்து மீண்டு வலிமையுடன் நாம் வருவோம் என குறிப்பிட்டார்.
சிறு தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஒருபோதும் தீமை ஏற்பட மத்திய அரசு விடாது என அப்போது அவர் கூறினார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டாலும் கூட அதற்கு மாற்று நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரியால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 8,730 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும். இதனால், ஆடைகள், ரத்தினங்கள், நகைகள், கடல்சார் உணவு பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள் சார்ந்த துறைகள் கடுமையாக பாதிப்பை எதிர்கொள்ளும்.
ஆனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் இந்திய மருந்து ஆலைகள், மின்னணு பொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் (ஆப்பிள் ஐபோன் உள்பட) ஆகியவை இந்த வரிவிதிப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் ஒருபுறம் வரி செலவுகளை ஏற்று கொள்வார்கள். மறுபுறம் அமெரிக்க இறக்குமதியாளர்கள் கூடுதல் பணம் கொடுத்து பொருட்களை வாங்கி கொள்வார்கள். இதனால், வரி விதிப்பு பாதிப்பு மக்களை சென்றடைவது குறையும். எனினும், 10 முதல் 25 சதவீத வரிகளை கொண்டுள்ள அண்டை நாடுகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது, இந்திய ஏற்றுமதியாளர்கள் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய பாதிப்புகள் உள்ளன.
இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். இதனால், வேலைவாய்ப்பின்மை மற்றும் பணி நீக்கம் போன்றவையும் அந்நிறுவன தொழிலாளர்களை பாதிக்கும். இதேபோன்று 2026 நிதியாண்டில் 0.2 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேவேளையில், டிரம்ப் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் பணவீக்கம் உச்சம் அடைந்து உள்ளது. அங்கே பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது. 2025 நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த $86.5 பில்லியன் பொருட்களில், $60.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், அதாவது மூன்றில் இரண்டு பங்கு, இப்போது 50% வரிவிதிப்பின் கீழ் வரும். இந்திய அரசின் மதிப்பீடுகள் சற்று குறைவாக, $48.2 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் எனக் கூறுகின்றன. இதில் நேரடியாக இந்தியா பாதிக்கப்பட்டாலும் மறைமுகமாக அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:43:39 PM (IST)

போர் நெருக்கடியை தீர்க்க முயற்சி: இந்தியா, சீனா தலைவர்களுக்கு புதின் பாராட்டு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:50:51 PM (IST)

ஷாங்காய் மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் : பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:19:14 PM (IST)

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: பிரதமர் மோடியிடம் சீன அதிபர் பேச்சு!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:52:40 PM (IST)

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் துணை பிரதமர் விருப்பம்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:43:51 PM (IST)

ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு: சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி; ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பு
சனி 30, ஆகஸ்ட் 2025 4:53:11 PM (IST)
