» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்
புதன் 2, அக்டோபர் 2024 12:30:26 PM (IST)

பாளையங்கோட்டையில் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை புனித தாமஸ் ரோடு (ஏ.ஆர்.லைன்) கதர் அங்காடியில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் இன்று (02.10.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணல் காந்தியடிகளின் 156வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
உத்தமர் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு முதலமைச்சர், கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால் நவீன சூழலுக்கு ஏற்ப புத்தம் புது வடிவமைப்புகளில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் நெசவு நெய்யப்படும் கதராடைகள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட கிராமப் பொருட்களை தமிழ்நாட்டிலுள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு தூண்டுகோலாய் துணை நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்க்கையிலும் உயர்வு ஏற்படுத்தி, கதர்த் தொழிலுக்குக் கை கொடுக்கும் வகையில், தேச நலன் காக்கும் கதர் மற்றும் கிராமப் பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் கதர் அங்காடி, 2 கிராமிய நூற்பு நிலையங்களும், காலணி உற்பத்தி அலகும், பேட்டையில் தச்சுக்கொல்லு உற்பத்தி அலகும், மாவட்ட கதர் கிடங்கும் இயங்கி வருகிறது. மேலும் இவ்வலுவலக கட்டுப்பாட்டில் 9 வாரிய தொழில் கூட்டுறவு சங்கங்களும் மற்றும் 10 பனைவெல்ல கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதாரநிலை உயர்வு செய்யப்பட்டும் உத்தமர் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைபிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித் தொகையாக 355 பயனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் ரூ.17.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் 02.10.2024 முதல் கதர் சிறப்பு விற்பனை காலம் முடியும் வரை தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் செயல்படும்.
மேலும், தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், பட்டு துண்டுகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், இலவம் பஞ்சினால் ஆன மெத்தை, தலையணைகள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேன், குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளினால் கதர் ரகங்களுக்கு 30%-ம், உல்லன் ரகங்களுக்கு 20%-ம் ஆண்டு முழுவதும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
அரசு துறைகளில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு அவர்களது மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி பண்டிகை காலம் வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.
2024-2025ம் ஆண்டிற்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.114.00 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட கதர் துணிகளை பெருமளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் தமிழ்நாடு கதர் கிராமம் தொழில் வாரியம், திருநெல்வேலி வடிவேலன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எம்.எஸ்.மகாகிருஷ்ணன், மேலாளர் பாலசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள், கதர் கிராம தொழில் வாரிய அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி, நெல்லையிலிருந்து கட்ரா செல்லும் ரயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:13:13 PM (IST)

தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:48:00 AM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் நவீன வாசிப்புக் கருவிகள் - ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:05:43 PM (IST)


