» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருச்செந்தூர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 8:26:43 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 7-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. மறுநாள் முதல் கோவிலில் மண்டல பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். மொத்தம் 35 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜைக்கான நிறைவு விழா நேற்று நடந்தது.
இதையொட்டி கோவில் சண்முக விலாச மண்டபம், மகா மண்டபம் போன்ற அனைத்து பகுதிகளும் கரும்பு, பழங்கள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
7 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரம் அருகே கரியமாணிக்க விநாயகர், மூலவர், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு கும்பங்கள் வைக்கப்பட்டு யாகபூஜைகள் நடந்தது. அதேபோல் கந்தசஷ்டி யாகசாலை மண்டபத்தில் உள்ள சுவாமி சண்முகருக்கும், பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும், குமாரவிடங்கபெருமான் சன்னதி பரிவாரமூர்த்தி தெய்வங்களுக்கும் கும்பங்கள் வைக்கப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்றது.
காலை 9.05 மணிக்கு பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் அந்தந்த சுவாமி சன்னதிகளுக்கு எடுத்து வரப்பட்டது. முதலில் வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு கும்ப நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர், சண்முகர், பெருமாள் உள்ளிட்ட பரிவார மூர்த்தி தெய்வங்களுக்கு கும்பநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர் சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில், கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, தாசில்தார் பாலசுந்தரம், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, நகர தி.மு.க. செயலாளர் வாள் சுடலை மற்றும் கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)

நெல்லை பல்கலை. மாணவர்களிடையே மோதல்: காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 3:27:16 PM (IST)

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:53:18 AM (IST)

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
புதன் 27, ஆகஸ்ட் 2025 10:07:51 AM (IST)
