» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் உள்பட மூவருக்கு 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:40:42 PM (IST)



நெல்லையில் ஐ.டி. ஊழியர்  கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் உள்பட மூவருக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ்(27), கடந்த மாதம் 27-ம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோரை நெல்லை மாநகர போலீசார் கைது செய்தனர். பின்னர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தந்தை, மகனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டன. கொலைக்குப் பிறகு சுர்ஜித், தனது பெரியம்மா மகனான தூத்துக்குடியைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் ஜெயபாலை (29) தொடர்பு கொண்டது தெரியவந்தது. 

கவினைக் கொலை செய்யப் பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த சட்டையை மறைத்து வைக்கவும், தப்பித்து வந்த பைக்கின் பதிவு எண்ணை மாற்றவும் ஜெயபால் உதவியது அம்பலமானது. இதையடுத்து, கொலைக்கான தடயங்களை மறைத்ததாக ஜெயபாலும் கைது செய்யப்பட்டார். இதனால், வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

காவல் விசாரணை முடிந்ததும் கைதான 3 பேரும் நெல்லை தீண்டாமை வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமா முன்பு ஆஜர்படுத்தப்பட்டபோது, அடுக்கடுக்கான முறையீடுகளை முன்வைத்தனர். சுர்ஜித், "போலீசார் என்னை அடிக்கவில்லை, ஆனால் ‘நாங்கள் சொல்வதுபடி கேட்காவிட்டால் உன் குடும்பத்தினரை வழக்கில் சேர்த்து சிறையில் அடைத்துவிடுவோம்’ என மிரட்டினர்” என்று முறையிட்டார். 

அவரது தந்தை சரவணன், "என்னிடம் 2 நிமிடம் மட்டுமே விசாரணை நடத்தினர்” என்றார். ஜெயபால், "என்னை எந்த வழக்கில் கைது செய்துள்ளார்கள் என்றே தெரியவில்லை” எனக் கூறியது நீதிமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 3 பேரையும் கூண்டிலிருந்து இறக்கி, வாக்குமூலங்களை நீதிபதியே நேரடியாகப் பதிவு செய்து கொண்டார். 

பின்னர், மூவரையும் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை 13 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, 3 பேரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து சுர்ஜித் தரப்பு வழக்கறிஞர் சிவ சூரியநாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மூவரின் நீதிமன்றக் காவல் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வருகிற செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு, ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கக் கோராத நிலையில், நீதிமன்றக் காவல் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory