» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஎன்பிஎஸ்சி தலைவராக பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 4:56:05 PM (IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.கே. பிரபாகரை, டிஎன்பிஎஸ்சியின் தலைவராக நியமித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி-யின் தலைவராக எஸ்.கே. பிரபாகர், பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரச பின்பற்றவில்லை என்று கோப்புகளை திருப்பி அனுப்பியது. இதையடுத்து, உரிய கோப்புகளுடன் தமிழக அரசு மீண்டும் பரிந்துரையை அனுப்பியது.
ஆனாலும், அந்த பரிந்துரையை ஏற்க ஆளுநர் முன் வராமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள எஸ்.கே. பிரபாகர் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி-க்கு, புதிதாக 9 உறுப்பினர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.