» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓட்டல் உரிமையாளரை ‘ஷூ’வால் தாக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
வியாழன் 5, செப்டம்பர் 2024 8:40:37 AM (IST)
சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை ‘ஷூ’வால் தாக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் காவேரி. இவர் அருகே உள்ள ஓட்டலில் அடிக்கடி உணவு சாப்பிடுவது வழக்கம். நேற்று முன்தினம் அவர் அந்த ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். பின்னர் பணம் கொடுக்க வந்தபோது ஓட்டல் உரிமையாளர் முத்தமிழ், அவர் முதல் நாள் சாப்பிட்ட உணவிற்கு தரவேண்டிய பணத்தையும் சேர்த்து தருமாறு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஓட்டல் உரிமையாளர் முத்தமிழ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவேரியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது காலில் அணிந்திருந்த ‘ஷூ’வை கழற்றி கடை உரிமையாளர் முத்தமிழை தாக்க முயன்றார் அப்போது ஓட்டல் ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவேரி அங்கிருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் குறித்த காட்சிகள் அந்த ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து காவேரியை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து எஸ்பி மகேஸ்வரன் உத்தரவிட்டார்.