» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!

வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)



குமரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, துறை அலுவலர்களுடன் தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (கட்டடம்) நீர்வளஆதாரத்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும், தமிழ்நாடு அரசு 2025-2026 நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பின் படி நடைபெறவுள்ள பணிகள் குறித்தும், திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்புத்துறையின் கீழ் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் 9 பணிகள் ரூ.11.43 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள், சீரமைப்பு பணிகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட பணிகளும், மருத்துவத்துறையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு, குலசேகரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடம் என 3 பணிகள் ரூ.29 கோடி மதிப்பிலும், பிற அரசு துறைகளில் 4 பணிகள் ரூ.32.41 கோடி மதிப்பிலும் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்புத்துறையின் கீழ் 6 கட்டிட பணிகள் ரூ.13.32 கோடி மதிப்பில் முடிவடைந்துள்ளது. மேலும் 4 கட்டிட பணிகள் 8.70 கோடி மதிப்பில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நிதிநிலை அறிக்கை (2025-2026) யின் கீழ் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில்ஏற்கெனவே உள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவனையில் கூடுதலாக 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை ரூ.11.40 கோடி மதிப்பில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைவில் துவக்க உரிய நடவடிக்கை பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 6 நீர்நிலைகளும், தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 52 நீர்நிலைகளும், கல்குளம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 239 நீர்நிலைகளும், திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 99 நீர்நிலைகளும், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 233 நீர்நிலைகளும், கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 95 நீர்நிலைகளும் என மொத்தம் 724 நீர்நிலைகள் உள்ளன. 

அதில் 443 நீர்நிலைகள் பொதுப்பணித்துறை (நீர்வளம்) கீழும், 234 நீர்நிலைகள் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளிலும், 47 நீர்நிலைகள் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள குளங்களை அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் வாயிலாகவும், மீதமுள்ள சிறுபாசனங்களை அரசு நிதி மற்றம் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் வாயிலாகவும் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு தூர்வாருவதன் மூலம் ஊரக பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும். மேலும் இப்பணிகளை மேற்கொள்வதால் பேரிடர் காலங்களில் அதிகளவில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வருவதை தடுக்கவும் வழிவகை செய்கிறது. மேலும் இதுபோன்ற நீர்நிலைகளை அடிக்கடி கண்காணிக்க பொதுப்பணித்துறை, நீர்வளத்ஆதாராத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

தொடர்ந்து நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பக்கவாட்டு சுவர்கள், மதகுகள், சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் வரும் பருவமழை காலத்திற்கு முன்பாக, பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்புடனும், உறுதித் தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்து, பணிகளை விரைந்து முடிக்க துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நெடுஞ்சாலை துறைகள் சார்பில் நடைபெற்று வரும் அனைத்து சாலைகள் மற்றும் பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், 2025-2026 நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பின் படி விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.19 கோடி மதிப்பில் 68.57 கி.மீட்டர் நீளத்திற்கு நடைபெறவுள்ள 25 பணிகளை விரைந்து தொடங்கிட நெடுஞ்சாலை துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. 

தொடர்ந்து நகராட்சிகள், பேரூராட்சிகள், சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் கீழ் நடைபெற்று வரும் பேருந்து நிலைய பணிகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், அம்ரூத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள், புதிய காய்கறி சந்தை பணிகள், கழிப்பறைகள் சீரமைத்தல் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட ஒப்பந்தாரர்களுக்கு அறிவுறுத்துவதோடு, பணிகள் தொடர்வதில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்கள் உறுதிசெய்திட அறிவுறுத்தப்பட்டது என்று அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நெடுஞ்சாலை துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் ஜோசப் ரென்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சுசீலா பீட்டர், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி கண்காணிப்பு அலுவலர், துறை அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory