» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரியிலிருந்து சாய் நகர் சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல நேரடி ரயில் இயக்க பக்தர்கள் கோரிக்கை
சனி 30, ஆகஸ்ட் 2025 12:44:37 PM (IST)
கன்னியாகுமரியிலிருந்து சாய் நகர் சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல நேரடி ரயில் இயக்க வேண்டும் என்று சாய்பாபா பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரியிலிருந்து இந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களுக்கு நேரடி ரயில் சேவைகள் மிகவும் குறைவாக உள்ளதாக பக்தர்கள் நீண்ட காலமாக குறை கூறி வருகின்றனர். தற்போது, கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வாரத்தில் மூன்று முறை ரயிலும், வாரணாசிக்கு வாராந்திர ரயிலும் மட்டுமே நேரடியாக இயக்கப்படுகின்றன. மற்ற சில இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டாலும், பயணிகளின் கூட்ட நெரிசல் காரணமாக ஆன்மிக பயணிகளுக்கு இருக்கைகள் கிடைப்பது அரிதாக உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து பூரி, திருப்பதி, உடுப்பி, துவாரகா, சீரடி, அயோத்தி, ஹரித்வார், ரிஷிகேஷ், அமிர்தசரஸ், நாசிக், கயா உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு தனி நேரடி ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவில், இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஸ்ரீ சாய் சத்சரிதத்தின்படி, சாய்பாபா தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். மும்பையிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சீரடி, 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீரடி சாய்பாபாவின் திருக்கோயிலைக் கொண்டுள்ளது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என இரு சமயத்தவர்களாலும் வணங்கப்படும் சாய்பாபா, ஆன்மிக குருவாகப் போற்றப்படுகிறார். இந்தக் கோவில், ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி கோவிலுக்கு அடுத்தபடியாக உலகின் பணக்கார கோவில்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும், மேலும் ஆரத்தி தரிசனம் மிகவும் விசேஷமானது.
சாய்பாபாவின் மகிமையால் ஈர்க்கப்பட்டு, தினமும் சுமார் 60,000 பக்தர்கள் இங்கு வருகை தருவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. சாய்பாபாவை ஒரு முறை தரிசித்தாலே பாவங்கள் அகலும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது. "சிட்டுக்குருவியின் காலில் கயிறு கட்டி இழுப்பது போல, பக்தர்களை என் பக்கம் இழுப்பேன்” என்று சாய்பாபா கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சாய்பாபா கோவில்கள் அமைந்து வழிபாடு நடைபெறுகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருகே சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, சென்னையைத் தவிர வேறு ஊர்களிலிருந்து நேரடி ரயில் சேவை இல்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வாராந்திர ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. ஆனால், தென் மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்தில் நின்றுவிடுகின்றன. இதனால், குறிப்பாக முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னையிலிருந்து சீரடி சாய்நகருக்கு இயக்கப்படும் வாராந்திர ரயிலை, பராமரிப்பு காரணங்களுக்காக ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும். இதேபோல், சென்னையில் உள்ள சாய்பாபா பக்தர்களின் வசதிக்காக, திருப்பதியிலிருந்து சீரடி சாய்நகருக்கு இயக்கப்படும் வாராந்திர ரயிலை சென்னை சென்ட்ரல் வரை நீட்டித்து இயக்க வேண்டும். இந்தத் திருப்பதி ரயில் நீட்டிப்புக்காக தென் மத்திய ரயில்வே மண்டலத்தால் திட்டக் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இரு ரயில்களையும் நீட்டித்து இயக்குவது அனைத்து பகுதி பயணிகளுக்கும் பயனளிக்கும் மற்றும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.
சாய்பாபாவை வியாழக்கிழமைகளில் வழிபடுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் பசியோடு இருப்பதை சாய்பாபா விரும்புவதில்லை. எனவே, அவர் தன் கைகளால் பக்தர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து, சாய்பாபா கோவில்களில் வியாழக்கிழமைகளில் அன்னதானம் நடைபெறுவது வழக்கம். சாய்பாபாவே பிரசாதம் வழங்குவதாக நம்பப்படுவதால், ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை வரிசையில் நின்று அன்னதானம் பெறுகின்றனர். இந்த நாளில் சிறப்பு பூஜைகள், ஆரத்தி மற்றும் அன்னதானம் நடைபெறுகின்றன. நெய் தீபம் ஏற்றி சாய்பாபாவை வணங்குவது பக்தர்களுக்கு நன்மைகளைத் தரும் என நம்பப்படுகிறது. மேலும், இந்நாளில் சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
நீட்டிப்பு செய்யப்பட்டால் கால அட்டவணை
சென்னையிலிருந்து சீரடி சாய்நகருக்கு இயக்கப்படும் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தால், இந்த ரயில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை மதியம் 1:30 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடைந்து, வியாழக்கிழமை காலை 10:50 மணிக்கு சீரடி சாய்நகரை அடையும். பின்னர், வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு சீரடியிலிருந்து புறப்பட்டு, சனிக்கிழமை காலை 5:45 மணிக்கு ஜோலார்பேட்டை வந்து, அதே நாள் மாலையில் கன்னியாகுமரியைச் சென்றடையும் வகையில் கால அட்டவணை அமையும். இந்த ரயில், வியாழக்கிழமை சீரடியில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சீரடியில் முக்கிய திருவிழாக்கள் போது சிறப்பு ரயில் :
சீரடியில் முக்கிய திருவிழாவாக குரு பூர்ணிமா மற்றும் சாய்பாபாவின் மகாசமாதி நடந்து வருகின்றது. இதில் பக்தர்கள் மற்றும் சீடர்கள் தங்கள் குருவைப் புகழ்ந்து ஆசிகள் பெறுகின்றனர் என்பதை குரு பூர்ணிமாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சீரடி சாய்பாபா, 1918 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி, தனது ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்தார். இது அவரது மகா சமாதி தினமாகவும் அனுசரிக்கப்பட்டது
தற்போது நாகர்கோவிலிருந்து காச்சுகுடாவிற்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் காலி பெட்டிகள் வாரத்துக்கு நான்கு நாட்கள் காலியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த காலி பெட்டிகளை வைத்து வருகின்ற அக்டோபர் மாதம் முழுவதும் மகா சமாதி தினத்தில் சிறப்பு ரயில் சேவை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இவ்வாறு சிறப்பு ரயில் இயக்கி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் பட்சத்தில்; நிரந்தர ரயிலாக இயக்க நல்ல வசதிவாய்ப்புகள் உருவாகும் என குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்க தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:23:17 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு துரோகம் செய்யும் திமுக தப்பிக்கவே முடியாது: அன்புமணி காட்டம்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:57:04 PM (IST)

சாமிதோப்பு அய்யா கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:32:12 PM (IST)

நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்: ஆட்சியர் வழங்கினார்.
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:27:03 PM (IST)

தமிழகத்தில் செப்.5ஆம் தேதி மது விற்பனைக்கு தடை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:40:17 PM (IST)

மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் : சசிகாந்த் எம்பியுடன் ராகுல் பேச்சு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:31:11 PM (IST)
