» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் : த.வெ.க. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

வியாழன் 18, செப்டம்பர் 2025 5:12:16 PM (IST)

கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக் கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று தவெக வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார். கடந்த செப்.13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், செப்டம்பர் 20-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை ஒவ்வோரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் காவல்துறை அனுமதி வழங்குவதாகவும், அதேபோல தவெக-வுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரியும் கடந்த செப்.9 மற்றும் செப்.15ம் தேதிகளில் டிஜிபி-யிடம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, த.வெ.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும், மற்ற கட்சிகள் மீது விதிக்கப்படாத நிபந்தனைகளும் த.வெ.க.வுக்கு விதிக்கப்படுவதாக” வாதிட்டார்.

எந்த வழியாக சென்னை திரும்ப வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், எத்தனை வாகனங்கள் வர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என நாங்கள் எப்படி சொல்ல முடியும் எனவும் வழக்கறிஞர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, இது போன்ற நிபந்தனைகள் அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்படுவது தானே ? என வினவிய நீதிபதி, முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா ? யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்கு உட்பட்டு நடத்த வேண்டும்.

தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துகளுக்கான இழப்பீடு வசூலிக்கப் பட்டதா ? இல்லையென்றால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, "கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என கோரிக்கை விடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் முன் மாதிரியாக திகழலாமே?” என அறிவுறுத்தினார்.

அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜ் திலக், "எந்த இடத்திலும் அனுமதி மறுக்கப்படாமல், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக” வாதிட்டார். மேலும், திருச்சி பரப்புரையின் போது தவெக தொண்டர்களின் செயல்களை புகைப்படமாகவும் காவல்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதனை பார்த்த நீதிபதி, "இவர்கள் இது போன்று உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது ? இதனை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா?” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும் பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்க தமிழக காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், விதிமுறைகள் வகுப்பது குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory