» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு உரிமைகள் (TN RIGHTS) திட்ட விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN RIGHTS) குறித்து அரசுத்துறைகள், மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வத் தொண்டுநிறுவனத்திற்க்கான மாவட்ட அளவிலான விளக்கக் கூட்டம் இன்று (18.09.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப, கலந்துகொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களை போன்று அனைத்து துறைகள் சார்ந்த திட்டங்களில் இணைந்து நலத்திட்ட உதவிகள் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் ஒரு முக்கிய திட்டமான மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN -Rights) உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத்தினாளிகள் சமூகத்துடனான உள்ளடங்கல் (Inclusion), அணுகல் (Accessibility) மற்றும் வாய்ப்புகள் (Oppurtunities) ஆகிய மூன்று கூறுகளை முன்னிறுத்தி உரிமைகள் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு வழங்கும் சேவைகள் சென்றடைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை வலுப்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவில் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைத்து நலத்திட்டங்கள் பராமரிப்பு மறுவாழ்வு போன்றவற்றை செயல்படுத்துதல், இ.சேவை மையங்கள் துணையுடன் மற்ற துறைகளின் சேவைகளையும் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தி சமுதாய அளவிலான திட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டத்திற்காக (Rights Project) செயல்படுத்துவதற்கு சென்னையில் 3 மண்டலங்கள் (இராயபுரம், வி.க நகர் மற்றும் சோழிங்கநல்லூர்), கடலூர், தருமபுரி, திருச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்டங்களாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கால அளவு 6 வருடங்களாகும். இத்திட்டத்தின்கீழ் இல்லங்கள் தோறும் சென்று மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்கும் பணியானது நமது மாவட்டத்தில் ஜூன் 2025 துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்கீழ் களப்பணி மேற்கொள்ள நிலா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள 170 முன்களப்பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் நமது மாவட்டத்திற்குட்பட்ட 5.8 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்களை முன்களப்பணியாளர்கள் நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் ஆக இருப்பின் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். முன்களப்பணியாளர்களால் அடையாளம் காணப்படும் புதிய மாற்றுத்திறனாளிகளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமிற்கு வரவழைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, எத்தனை சதவீதம் ஊனமுற்றவர்கள் என மருத்துவ சான்றிதழ் பெற்று உடனடியாக தகுதியுள்ள பயனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை முன்களப்பணியாளர்கள் 2.8 இலட்சம் குடும்ப அட்டைத்தாரர்களை நேரில் சந்தித்து, களஆய்வு மேற்கொண்டுள்ளார்கள்.
கணக்கெடுப்பை தொடர்ந்து கோட்ட அளவில் மேற்படி OSC மையங்களை நிறுவகிக்க Divisional One Stop centres ஏற்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வட்டார அளவிலும் One Stop centres நிறுவப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் செயல்படுத்தப்படவுள்ளது. நமது மாவட்டத்திற்கு 17 Block OSC மற்றும் 2 Divisional OSC ஏற்படுத்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலன் அனைத்து துறைகளையும் உள்ளடக்கியது என்பதால் தற்போது நடைபெற்று வரும் TN RIGHTS கணக்கெடுப்பு பணி மற்றும் உரிமைகள் திட்டம் குறித்த முழுமையான புரிதல் அனைத்து துறை அலுவலர்களுக்கும், மாற்றத்திறனாளிகள் நலன் சார்ந்து செயல்படும் அரசு சாரா அறக்கட்டளைகளுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களுக்கும் மிகவும் அவசியமானதாக உள்ளது என்பதால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மாவட்ட அளவிலான திட்ட விளக்க கூட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திடவும், மாற்றுத்திறனாளிகள் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான தடைகள் அனைத்தையும் நீக்கி இந்த சமுதாயத்தின் பங்குதாரர்களாக முழுப் பங்கேற்று சமுதாயத்தில் அவர்களை இணைப்பதே முக்கிய குறிக்கோளாக கொண்டு அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு சலுகைகளை பெறுவதற்கு அடிப்படையாக மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை அவசியமாகிறது. மேலும் வாரந்தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மருத்துவக் குழுவினரால் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. உரிமைகள் திட்டம் தொடர்பாக இக்கூட்டத்தில் வழங்கப்படும் தகவல்களை தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் மாற்றுத்திறனாளிகள் நலனை முன்னிட்டு அரசு கொண்டு வந்துள்ள இந்த சீரிய திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்திட அனைத்து விதமான ஒத்துழைப்பும் வழங்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உதவி இயக்குநர் ரவீந்திரன், TN -Rights மாநில திட்ட மேலாளர்கள் முனைவர் இராஜராஜன், சங்கர் சகாயராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், துணை இயக்குநர் குடும்ப நலம் மரு.ரவிக்குமார், இளநிலை மறுவாழ்வு அலுவலர் பவித்ரா, தொண்டு நிறுவனங்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கப்பலில் இறந்த 3பேருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:48:22 PM (IST)

போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:31:17 PM (IST)

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் : த.வெ.க. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:12:16 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)
