» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில், ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
கடந்த 5-ம் தேதி கரூர் வந்த இக்குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், மருத்துவம், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும், கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் 2 பேரையும் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி முகேஷ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கரூர் வந்தனர். கரூர் பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர்களிடம், சிறப்பு புலனாய்வுக் குழு ஏடிஎஸ்பி திருமால், வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தார். இதை தொடர்ந்து, பல்வேறு துறை அரசு அலுவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணையை தொடங்கினர்.
சிறப்பு புலனாய்வுக் குழுவினர், கரூர் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர்வள ஆதாரத் துறை திட்ட இல்லத்தில் தங்கியிருந்துதான் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, புலனாய்வுக் குழுவில் இருந்த அதிகாரிகளில் பெரும்பாலானோர் புறப்பட்டுச் சென்ற நிலையில், ஒரு சிலர் மட்டும் தங்கியிருந்தனர்.
இந்த அலுவலகத்தின் தெற்கு பகுதியில் 3 இடங்களில் சில ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது நேற்று தெரியவந்தது. மேலும், 32 ஜிபி கொள்ளவு கொண்ட பென்-டிரைவ் ஒன்றும் சேதமடைந்து கிடந்துள்ளது. இதை செய்தியாளர்கள் வீடியோ, புகைப்படம் எடுத்ததை தொடர்ந்து, சேதமடைந்த பென்-டிரைவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் எடுத்துச் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு!
சனி 18, அக்டோபர் 2025 11:21:48 AM (IST)

தமிழகத்தில் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 10:43:51 AM (IST)

கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 18, அக்டோபர் 2025 8:53:28 AM (IST)

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் : புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:49:58 PM (IST)

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:16:40 PM (IST)
