» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
திங்கள் 17, நவம்பர் 2025 8:30:28 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் நல்ல வெயில் அடித்தது. இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலவி வருகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என்றும், இதனால் சில மாவட்டங்களில் மிக கனமழையும், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.
நேற்று காலை முதல் மிதமான வெயில் அடித்தது. மதியத்துக்கு பிறகு திடீரென மேகங்கள் திரண்டு வந்தன. மதியம் 1.30 மணியளவில் திடீரென மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) பரவலான கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த நாளில் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்யும்போது, வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள், மின் கம்பம், மின் மாற்றிகள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளபெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
பொதுமக்கள் தங்களது ஆதார், ரேஷன்கார்டு அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில். பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த அவசரக்கால கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 0461-2340101 என்ற தொலைபேசி எண் மற்றும் 9486454714, 9384056221 ஆகிய செல்போன் எண்கள் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு சென்ற படகுகள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 99 விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களை நிரப்ப திமுக இளைஞர் அணி உதவ வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 17, நவம்பர் 2025 11:06:00 AM (IST)

ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டரை எட்டி உதைத்த போதை ஆசாமி கைது!
திங்கள் 17, நவம்பர் 2025 8:47:52 AM (IST)

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:28:56 PM (IST)

கனமழை எச்சரிக்கை: நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:41:16 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : பெண் சிக்கினார்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:39:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: 2,632 பேர் எழுதினர்; 404 பேர் வரவில்லை!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:32:55 AM (IST)




