» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!

சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத் தோட்டத்தினை வனத்துறைக்குக் கையளிக்கும் முடிவைக் கைவிடுவதோடு, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பர் கழகத்தின் கீரிப்பாறை பிரிவில் சுமார் 18 ஹெக்டேர் ரப்பர் தோட்டத்தை வனத்துறையின் கீழ் மாற்றியிருப்பதோடு, அந்த நிலத்தில் உள்ள ரப்பர் தோட்ட பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் தாரைவார்த்து அரசு தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை தமிழ்நாடு அரசு கேள்விக்குள்ளாக்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

கடந்த 1964-ம் ஆண்டு, பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக் காலத்தில், தொழிற்வாய்ப்புகள் குறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தோடு கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மருதம்பாறை உள்ளிட்ட 9 கோட்டங்களில் அரசு ரப்பர் தோட்டக் கழகம் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ 5,000 ஹெக்டேர் பரப்பளவில், 5,000 தோட்டத் தொழிலாளர்களுடன் தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த அரசு ரப்பர் கழகம் இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையினால் தற்போது முற்று முழுதாகச் சீரழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறை ஊதியம் உள்ளிட்ட எவ்வித உரிமையும் வழங்காத காரணங்களினால் தற்போது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதிலும் தினக்கூலிகளாகப் பணிபுரிந்து வரும் 900 தொழிலாளர்களை வேலையில்லை என்று கூறி வாரத்தில் பல நாட்கள் அதிகாரிகள் திருப்பி அனுப்பும் கொடுமைகளும் அரங்கேறுகின்றது. ரப்பர் தோட்டங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருமானம் வரும் நிலையில், கூலி உயர்வு தரமறுத்து தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினை உறிஞ்சும் தமிழ்நாடு அரசின் செயல் அப்பட்டமான உழைப்புச் சுரண்டலேயாகும்.

இந்நிலையில், கீரிப்பாறை கோட்டத்தில் 18 ஹெக்டேர் ரப்பர் தோட்டத்தை வனத்துறைக்குக் கையளிக்கும் அரசின் முடிவை எதிர்த்தும், அம்முடிவிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 110 ஒப்பந்த தொழிலாளர்களுக்குப் பணி நீக்க ஆணை பிறப்பித்திருக்கும் ரப்பர் கழகத்தின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்தும் தொடர்ச்சியாக, தொழிலாளர்களுடன் நாம் தமிழர் கட்சி போராட்டக் களத்தில் நிற்கின்றது. ரப்பர் கழக அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தொழிலாளர்களுடன் இணைந்து அரசு ரப்பர் கழக அலுவலகத்தின் முன் நாம் தமிழர் கட்சி போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றது. 

ஆனால், ரப்பர் கழகத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் திமுக அரசு, போராடும் தொழிலாளர்களை மிரட்டி உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முனைவது அப்பட்டமான எதேச்சதிகாரப் போக்காகும். சமத்துவம், சமூகநீதி என்று பேசும் திமுக அரசு உழைக்கும் தொழிலாளர்களின் உரிமையை காக்கும் முறை இதுதானா? இதற்குப் பெயர்தான் யாரும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் அரசா?

ஆகவே, தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத் தோட்டத்தினை வனத்துறைக்குக் கையளிக்கும் முடிவைக் கைவிடுவதோடு, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். ரப்பர் கழகத் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory