» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மார்கழியில் மக்களிசை: பறை இசைத்து கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்!

சனி 27, டிசம்பர் 2025 10:58:05 AM (IST)



சென்னையில் மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பறை இசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை அமைந்தகரையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் 6 ஆம் ஆண்டு 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் துவக்க நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியை பறை இசைத்து துவக்கி வைத்தனர். இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ''சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் இருந்து தான் எனக்கு இது போன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு எண்ணம் தோன்றியது'' என்றார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசும் போது, மார்கழியில் மக்களிசை என்பது மாற்று அரசியலை பேசக்கூடிய மேடையாக உள்ளது. அதே சமயம் ஒரு சமூகத்தை செதுக்கக்கூடிய கலை மேடையாக இந்த மேடை இருக்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற வேண்டும். எடுத்தவுடனே ரஞ்சித் கையில் பறையை கொடுத்து வாசிக்க சொன்னார்கள். மறுபடியும் நமது என்று சொல்லக்கூடிய ஒரு மேடையாக இந்த மேடையை அவர் மாற்றி இருக்கிறார். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இசை என்பது அனைவருக்கும் பொதுவானது. 3 ஆவது ஆண்டாக இதில் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இவ்வருடம் அரசியலில் மிக முக்கியமான வருடம். அடுத்த 15 ஆண்டுகள் எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கப் போகிறது. அதனால் வரும் தேர்தல் முக்கியனானது. நிறைய போட்டிகள் உள்ளது. இருப்பினும் மிக முக்கியமான தேர்தல். இந்த இசை நிகழ்ச்சி கலாச்சாரம், பண்பாடு இதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். அதன் மூலம் நிறைய அறிவார்ந்தவர்கள் நமக்கு கிடைப்பார்கள்'' என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ''இந்த நிகழ்ச்சிக்கு நான் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறேன். எல்லா கால கட்டத்திலும் கலை என்பது மக்களுக்கானது என்பதை நான் தொடர்ச்சியாக கூறி வருகிறேன். இயக்குநர் ரஞ்சித் போன்றவர்கள் அதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமோ அப்படி சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதனால் இங்கு வந்தேன்.
இதையும் படிங்க: ''அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத அன்புமணிக்கு என்னை நீக்க அதிகாரம் இல்லை'' - ஜி.கே.மணி ஆவேசம்

மாற்றம் என்பது அவசியம் அது நம்மில் இருந்து வரக்கூடியது. அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதை நான் தொடர்ந்து தவிர்த்து வருகிறேன். கூலி திரைப்படம் வெளியான பிறகு மக்களுக்கு நன்றி தெரிவிக்க எனக்கு சரியான மேடை அமையவில்லை. ஒரு படம் வெளியான பிறகு நல்ல விமர்சனங்களும் எதிர்மறையான விமர்சனங்களும் வரத்தான் செய்கிறது. விமர்சனங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த படத்தில் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். கூலி படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தீர்கள். அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory