» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை: ஜன நாயகன் விவகாரத்தில் காங். ஆதரவு!

வியாழன் 8, ஜனவரி 2026 10:16:38 AM (IST)

தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இருப்பதை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

ஜன நாயகன் திரைப்படம் நாளை வெளியாகவிருந்த நிலையில், இன்னும் தணிச்சைச் சான்றிதழ் வழங்கப்படாததால் படத்தின் வெளியீட்டைத் தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்ட நிலையில், பொதுவாக பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரத்தில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும், ஆனால், ஜன நாயகனுக்கு தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தணிக்கை வாரியம் 4 வாரங்கள் அவகாசம் கேட்டிருக்கும் நிலையில், ஜன. 9 காலை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஜன நாயகனுக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"ஆர்எஸ்எஸ் பிரசார திரைப்படங்கள் எந்தவித வரவேற்பும், நம்பகத்தன்மையும், மக்கள் ஆர்வமும் பெறாதபோது, மோடி – ஷா ஆட்சி நம்பிக்கையுடன் அல்லாமல் கட்டுப்பாட்டுடனேயே பதிலளிக்கிறது. இப்போது திரைப்படத் துறை குறிவைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(அ) பிரிவு, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்த்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் கீழ், இந்த உரிமை சட்டத்தின் மூலம் அல்லாமல், அச்சத்தின் மூலம் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகிறது.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கான முன்னணி அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்போது தணிக்கை வாரியம்கூட சினிமா மற்றும் கருத்துக்களைக் கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாகச் சுருக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பாஜக-ஆர்எஸ்எஸ் பிரசாரம் "பண்பாடு" என்று சித்தரிக்கப்படுகிறது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை. அதற்கு அரசியலமைப்புப் பாதுகாப்புதான் தேவை. அதிகாரத்தின் முன் கலையை மண்டியிட நிர்பந்திக்கப்படும்போது ஜனநாயகம் உயிர்வாழ முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory