» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, முன்னிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட முகிலன்விளை நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000யினை குடும்ப அரிசி அட்டைத்தாரர்களுக்கு வழங்கி பேசுகையில்:- கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 121 கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் செயல்படும் 581 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 135 நியாய விலைக்கடைகள், மீனவர் மற்றும் இதர கூட்டுறவின் கீழ் செயல்படும் 46 நியாய விலைக்கடைகள், சுயஉதவிக்குழுவால் நடத்தப்படும் 3 நியாய விலைக்கடைகள் என மொத்தம் 765 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,79,667 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 406 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் சேர்த்து 580073 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று 08.01.2026 முதல் பொங்கலுக்கு முன்தினம் வரை வழங்கப்படும்.
பொது விநியோகத்திட்டம் என்பதே உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதற்கே ஆகும் இந்தியாவில் வாழக்கூடிய 140 கோடி மக்களுக்கும் பொது விநியோகத் திட்டம் இல்லை என்றால் இந்தியாவில் அனேக மக்களுக்கு உணவு பாதுகாப்பு என்பது இருக்காது. முன்பெல்லாம் இயற்கை பேரிடர்கள் நம்மை வாட்டி வதைக்கும் அத்தகைய காலங்களில் நமக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும் பஞ்சம் என்பது அதிகமாக நம்முடைய இந்தியாவில் இருந்தது. ஆனால் தற்போது இந்த பஞ்சம் குறைந்துள்ளது. அதற்கு காரணம் பொது விநியோகத்திட்டம் தான்.
நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் தவறாது, குறித்த நேரத்தில் ரேசன் பொருட்களை பொதுமக்களுக்கும், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கின்ற அரசாக செயல்படுகிறது. நம்முடைய முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் தான் சமத்துவ பொங்கல் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி, ஒரே பந்தியில் அனைத்து தரப்பட்ட மக்களும் அமர்ந்து சாப்பிட வைத்து, இத்திட்டத்தினை செயல்படுத்தினார்கள்.
நம்முடைய வளர்ச்சி என்பது ஒற்றுமையில் தான் இருக்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்பதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 3000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சிவகாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கலைமதி, துணைப்பதிவாளர் (பொதுவிநியோகத்திட்டம்) முருகன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, வழக்கறிஞர் சிவராஜ், பூதலிங்கம், ஆனந்த், துறை அலுவலர்கள் பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு முக்கியமான தேர்தல்; திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது : அன்புமணி பேச்சு
வெள்ளி 9, ஜனவரி 2026 12:55:23 PM (IST)

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பஸ் நிலையம் கட்ட எதிர்ப்பு: ஜமாத்தார்கள் திரண்டதால் பரபரப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 11:40:35 AM (IST)

ஜனநாயகன் படத்தின் பேனா் விழுந்து அரசு ஊழியா் படுகாயம்: தவெக நிா்வாகிகள் 3போ் கைது!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:30:37 AM (IST)

ஜன நாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 9, ஜனவரி 2026 10:55:38 AM (IST)

தூத்துக்குடி-மைசூர் இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:38:08 PM (IST)

ஜன நாயகன் விவகாரத்தில் பாஜக நெருக்கடி கொடுத்ததா? எச். ராஜா மறுப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:30:29 PM (IST)

