» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேகேதாட்டு அணை விவகாரம் : சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!
வெள்ளி 19, ஜூன் 2026 11:26:14 AM (IST)

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 09:30 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்தில், மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு எதிரான தனித் தீர்மானத்தை அவையில் முன்மொழிந்தார்.
விவசாயிகள் நலனே முக்கியம் - முதல்வர் விஜய்:
தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் பேசியதாவது: "காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ஆம் ஆண்டு அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசு தன்னிச்சையாகக் காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக அரசின் இச்செயலுக்கு இப்பேரவை தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது.
காவிரிப் பிரச்சினை என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான விவகாரமாகும். எனவே, பிற படுகை மாநிலங்களின் இசைவின்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் கர்நாடகா புதிய நீர்த்தேக்க திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என அந்த அரசுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) பரிசீலிக்கவோ, அதற்கு ஒப்புதல் வழங்கவோ கூடாது என மத்திய நீர்வள குழுமத்தையும் (CWC) இப்பேரவை கேட்டுக்கொள்கிறது. தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திடத் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை ஒருமனதாகத் தனது ஆதரவைத் தெரிவிக்கிறது" எனப் பேசினார்.
அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவு:
முதல்வர் விஜய் கொண்டு வந்த இந்தத் தனித் தீர்மானத்தை வரவேற்று அவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து உரையாற்றி வருகின்றனர். இதுவரை காங்கிரஸ், அதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக, பாமக, கொமதேக உள்ளிட்ட அனைத்து முக்கியக் கட்சிகளும் முதல்வரின் தீர்மானத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
தீர்மானத்தின் மீது முதலாவதாக உரை நிகழ்த்திய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், "முதல்வர் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்தைக் காங்கிரஸ் முழுமையாக ஆதரிக்கிறது. காவிரி என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீரை மூன்று வழித்தடங்களில் கர்நாடக அரசு வழங்க வேண்டும். அதனைத் தடுத்து மேகேதாட்டு அணை கட்ட முயல்வது சட்டவிரோதமானது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதால் கர்நாடகாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு இத்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை: நிர்வாகம் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 5:53:18 PM (IST)

மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவா? சி. மகேந்திரன் தவெக-வில் இணைந்ததால் சிபிஐ பரபரப்பு அறிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 4:44:00 PM (IST)

தூத்துக்குடி ஐடிஐ-களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 19, ஜூன் 2026 4:22:18 PM (IST)

சமையல் சிலிண்டர், பைக்குகளுக்கு மாலை அணிவித்து தூத்துக்குடியில் சிபிஎம் நூதன போராட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 3:17:02 PM (IST)

மனைவியை கல்லால் தாக்கிய கணவர் கைது : மது குடிப்பதற்கு பணம் தராததால் வெறிச்செயல்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:06:11 PM (IST)

அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:58:01 AM (IST)


