» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முருகன் வரலாற்றை திரித்தால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும்: சீமான் எச்சரிக்கை!
திங்கள் 6, ஜூலை 2026 11:36:45 AM (IST)

முருகனின் வரலாற்றைத் தவறாகத் திரித்தால் தெலுங்கு திரையுலகினர் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: "முருகனின் அறுபடை வீடுகள் உட்படத் தமிழகத்தின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுப்படை வரை சங்கத் தமிழ் இலக்கியங்கள் பலவும் சேயோன், நெடுவேள் என்று பற்பல பெயர் களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ். இரண்டையும் எவராலும் பிரிக்க முடியாது.
இந்நிலையில் தமிழ்க் கடவுள் முருகனை மையப்படுத்தி ஆந்திராவில், இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில், நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில், முருகனை வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாக்குவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழர் போற்றும் தெய்வங்களை யார் வேண்டுமானாலும் வணங்குவதற்கு உரிமை உண்டு. ஆனால், வரலாற்றைத் தவறாகத் திரித்து இழிவுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. முருகன் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி, அவற்றை கலை என்ற பெயரில் திணிக்க முயல்வதை படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "எச்சரிக்கையை மீறிப் படக்குழு வரலாற்றைத் திரித்தால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த எதிர்ப்பையும் மீறிப் படம் உருவாக்கப்பட்டுத் திரைக்கு வந்தால், தமிழகத்தில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிட விடாமல் நாம் தமிழர் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்" என்றும் சீமான் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாதந்தோறும் 2,000 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:39:47 AM (IST)

மக்கள் தீர்ப்பை திமுகவிற்கு மதிக்கத் தெரியவில்லை : நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:24:28 AM (IST)

பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
சனி 18, ஜூலை 2026 5:39:54 PM (IST)

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 18, ஜூலை 2026 11:39:35 AM (IST)


