» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் 2025 : பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகள்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 11:52:52 AM (IST)
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இதுவரை 42 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் 28 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இந்நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் இன்னும் எத்தனை வெற்றிகள் பெற வேண்டும்? என்பது குறித்து காணலாம்..!
1. குஜராத் டைட்டன்ஸ்
புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள முன்னாள் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் ஆடி 6 வெற்றி கண்டு 12 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றாலே குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
2. டெல்லி கேப்பிடல்ஸ்:
முதல் கோப்பைக்கு குறிவைத்துள்ள அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் ஆடி 6 வெற்றி கண்டு 12 புள்ளிகள் பெற்றுள்ளது. டெல்லி அணியும் மீதமுள்ள 6 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
கோப்பை ஏக்கத்தை தணிக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ள புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 9 போட்டிகளில் ஆடி 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றாலே பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும்.
4. மும்பை இந்தியன்ஸ்:
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை தொடக்க கட்டத்தில் சில தோல்விகளை தழுவியது. அதன்பின் எழுச்சி பெற்று தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்றுள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் கண்டு புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 6-வது கோப்பைக்கு குறிவைத்துள்ள மும்பை அணி எஞ்சியுள்ள 5 போட்டிகளில் குறைந்தபட்சம் 3 வெற்றிகள் பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும்.
5. பஞ்சாப் கிங்ஸ்:
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இம்முறை சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் (10 புள்ளிகள்) பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றாலே பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும்.
6. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரரான (ரூ.27 கோடி) ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 9 போட்டிகளில் ஆடி 5 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றால் எந்த வித சிக்கலுமின்றி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடலாம்.
7. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கோப்பையை தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்கிய நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 போட்டிகளில் ஆடி 3 வெற்றி மட்டுமே பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றால் கொல்கத்தா அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
8. ராஜஸ்தான் ராயல்ஸ்:
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் ஆடி 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஏறக்குறை பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறி விட்டது.
9. சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
அதிரடிக்கு பெயர் போன முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியானது இதுவரை 8 போட்டிகளில் ஆடி 2 வெற்றி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஐதராபாத் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
10. சென்னை சூப்பர் கிங்ஸ்:
5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை வழக்கத்திற்கு மாறாக வெற்றி பெற முடியாமல் போராடி வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால் 5 கோப்பைகளை சென்னை அணிக்கு வென்று கொடுத்த தோனி மீண்டும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் ஆடி 2 வெற்றி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1,500 ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்!
சனி 3, மே 2025 4:13:27 PM (IST)

குஜராத் அபார வெற்றி: வெளியேறியது ஹைதராபாத்!!
சனி 3, மே 2025 10:47:47 AM (IST)

தொடர்ச்சியாக 6 வெற்றிகள் : முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை
வெள்ளி 2, மே 2025 12:45:12 PM (IST)

ஸ்ரேயாஸ் அதிரடியில் சிஎஸ்கே தோல்வி : பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது!
வியாழன் 1, மே 2025 11:06:05 AM (IST)

டெல்லி அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் : ஆகாஷ் சோப்ரா
புதன் 30, ஏப்ரல் 2025 4:56:41 PM (IST)

மிக இளம் வயதில் சதம்: வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:06:34 AM (IST)
