» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா சாதனை!
ஞாயிறு 18, மே 2025 11:15:30 AM (IST)

தோகா டைமண்ட் லீக் போட்டி ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள தொடரின் 3-வது சுற்று போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் நள்ளிரவில் நடந்த ஈட்டி எறிதல் பந்தயத்தில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் (தங்கம், வெள்ளி) வென்றவரும், உலக சாம்பியனுமான இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா உள்பட 11 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு வீரரும் 6 முறை எறிய வேண்டும்.
இதன் முதல் வாய்ப்பில் 88.44 மீட்டர் தூரம் எறிந்த நீரஜ் சோப்ரா, 2-வது வாய்ப்பை பவுல் செய்து வீணடித்தார். 3-வது வாய்ப்பில் அருமையாக செயல்பட்ட அவர் 90.23 மீட்டர் வீசி வியக்க வைத்ததுடன் முன்னிலை பெற்றார். அதன் பிறகு அவர் 4-வது வாய்ப்பில் 80.56 மீட்டரும், 6-வது மற்றும் கடைசி வாய்ப்பில் 88.20 மீட்டரும் எறிந்தார். முன்னதாக 5-வது வாய்ப்பில் மீண்டும் பவுல் செய்தார்.
5-வது வாய்ப்பு வரை முன்னிலை வகித்த நீரஜ் சோப்ரா கடைசி கட்டத்தில் முதலிடத்தை இழந்தார். முதல் வாய்ப்பில் 83.82 மீட்டரில் தொடங்கி படிப்படியாக ஏற்றம் கண்ட ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் கடைசி வாய்ப்பில் 91.06 மீட்டர் தூரம் வீசி நீரஜ் சோப்ராவிடம் இருந்து முதலிடத்தை தட்டிப்பறித்தார். ஜூலியன் வெப்பரும் 90 மீட்டருக்கு மேல் எறிவது இதுவே முதல்முறையாகும். 2 முறை உலக சாம்பியனும், கடந்த ஆண்டு தோகா டைமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றவருமான கிரனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (85.64 மீட்டர்) 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய வீரர் கிஷோர் ஜெனா (78.60 மீட்டர்) 8-வது இடம் பெற்றார்.
அரியானாவை சேர்ந்த 27 வயதான நீரஜ் சோப்ரா 2-வது இடம்பெற்றாலும், 90 மீட்டர் இலக்கை எட்ட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை நனவாக்கினார். இந்த மைல்கல்லை முதல்முறையாக கடந்த நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனையும் (90.23 மீட்டர்) படைத்தார். இதற்கு முன்பு அவர் 2022-ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் (சுவீடன்) டைமண்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தூரம் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அவர் தனது முந்தைய சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார்.
இதன் மூலம் ஈட்டி எறிதலில் 90 மீட்டர் தூரத்துக்கு மேல் எறிந்த முதல் இந்தியர், 3-வது ஆசிய வீரர், உலக அளவில் 25-வது வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். உலக சாதனையாளரும், புதிய பயிற்சியாளருமான ஜான் ஜெலெஸ்னியுடன் (செக்குடியரசு) பயிற்சி கூட்டணி அமைத்த பிறகு நீரஜ் சோப்ரா தனது பல வருட ஏக்கத்தை தணித்து பெருமூச்சு விட்டுள்ளார்.
பிரதமர் வாழ்த்து
சாதனை படைத்த நீரஜ் சோப்ரா கூறுகையில், ‘இது லேசான கசப்பும், இனிப்பும் கலந்த முடிவாகும். 90 மீட்டருக்கு மேல் வீசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் 2-வது இடமே கிடைத்துள்ளது. இதுபோல் எனக்கு முன்பும் நடந்து இருக்கிறது. ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் எறிந்தும் 2-வது இடமே பெற்றேன். இங்கு தேசிய சாதனையை தகர்த்தும் 2-வது இடமே பெற்றுள்ளேன். ஜூலியன் வெபரும் முதல்முறையாக 90 மீட்டருக்கு அதிகமாக வீசி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இருவரும் முதல்முறையாக 90 மீட்டர் இலக்கை கடந்து இருக்கிறோம். இதற்காக நாங்கள் பல ஆண்டுகளாக முயற்சித்தோம். இறுதியாக தற்போது அதனை அடைந்துள்ளோம். கடந்த சில வருடங்களாக இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டேன். இதனால் எனது சிறந்த திறனை வெளிப்படுத்த முடியவில்லை. இந்த வருடம் நான் நன்றாக இருப்பதாக உணருகிறேன். நாங்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். எனவே இந்த ஆண்டில் வரும் போட்டியில் 90 மீட்டருக்கு மேல் வீச முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.
நாட்டுக்கு பெருமை சேர்த்து இருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இது ஒரு அற்புதமான சாதனை. தோகா டைமண்ட் லீக் போட்டியில் 90 மீட்டர் இலக்கை எட்டியதற்காவும், தனிப்பட்ட சிறந்த நிலையை அடைந்ததற்காவும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்துக்கு கிடைத்த பலன் இதுவாகும். இந்தியா உங்களை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 9 நிமிடம் 13.39 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன் 6-வது இடம் பெற்றார். இதன் மூலம் அவர் ஜப்பானில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் 9-வது இடமே பெற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய ரோஜர் பின்னி: ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:12:23 PM (IST)

மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை.. ஆனால் அக்கறையுடன்.. 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி பதிவு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:41:31 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)

தென் ஆப்பிரிக்க டி20 லீக் : பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:50:05 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு: முன்னாள் வீரர்கள் வாழ்த்து
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:18:00 PM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி: இந்தியாவின் சாதனையை முறியடித்த ஆஸி!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:10:45 PM (IST)
