» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி அறிவிப்பு

செவ்வாய் 27, ஜனவரி 2026 3:20:11 PM (IST)


இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய். இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை மேம்படுத்தவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த ஒப்பந்தம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% மற்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய எரிசக்தி வார விழாவில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, "ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்காக அனைவருக்கும் வாழ்த்துகள். நேற்று இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு மிக முக்கியமான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

மக்கள் இந்த ஒப்பந்தத்தை அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று விவாதித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தம் 140 கோடி இந்தியர்களுக்கும் கோடிக்கணக்கான ஐரோப்பியர்களுக்கும் நிறைய வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. இது உலகின் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த ஒப்பந்தம் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% மற்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது” என்று அவர் கூறினார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடனான (EFTA) ஒப்பந்தங்களுக்குத் துணையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் புதிய விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரை உச்சி மாநாட்டுப் பேச்சுவார்த்தைக்கு வரவேற்றார்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், இன்று (ஜனவரி 27) நடைபெறவிருக்கும் 16வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கூட்டாண்மை(SDP) ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.

இந்த சூழலில், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் இரண்டு பில்லியன் மக்களின் தடையற்ற வர்த்தக சந்தையை உருவாக்குகிறது என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் வான் டெர் லேயன் தெரிவித்தார். அவர், "ஐரோப்பாவும் இந்தியாவும் இன்று வரலாறு படைக்கின்றன. நாங்கள் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாயான ஒரு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். 

இரு தரப்பினருக்கும் பயனடையக்கூடிய வகையில், இரண்டு பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தடையற்ற வர்த்தக மண்டலத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. எங்கள் மூலோபாய உறவை இன்னும் வலுவாக வளர்ப்போம்” என்று வான் டெர் லேயன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் புதுடெல்லியில் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory