» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதி பதவிக்கு கோவை மூத்த வழக்கறிஞர் மோகனா பரிந்துரை!
வியாழன் 28, மே 2026 5:00:02 PM (IST)

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதி பதவிக்கு, கோயம்புத்தூரைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய மூத்த வழக்கறிஞருமான வி. மோகனா பெயரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைத்துள்ளது.
வி. மோகனா, கடந்த 1983-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பின் (5 Years Integrated LL.B.) முதல் அணியில் படித்து வெளிவந்த முதல் தலைமுறை வழக்கறிஞர் ஆவார். இவர் 1988-ஆம் ஆண்டு கோவை அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்தில் கல்வி, விவாதங்கள் மற்றும் நாடகங்கள் எனப் பல்துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
படிப்பை முடித்தவுடன், கோவையின் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞர் எம். பஞ்சாபகேசனிடம் மோகனா தனது ஆரம்பகாலச் சட்டப் பயிற்சியைப் பெற்றார். அங்கு வழக்குக் குறிப்புகள் தயாரித்தல், வாதங்களைத் திட்டமிடுதல் மற்றும் நீதிமன்ற விசாரணைகளை நேரடியாகக் கவனித்தல் போன்ற சட்டப் பணியின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய அன்றைய நீதிமன்றச் சூழலில், தனது திறமையால் பெரிதும் பேசப்பட்டார்.
கடந்த 1992-ஆம் ஆண்டு தனது சட்டப் பயிற்சியைப் புது தில்லிக்கு மாற்றிய மோகனா, பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த இந்து மல்ஹோத்ரா வழக்கறிஞராக இருந்தபோது அவருடைய அலுவலகத்தில் இணைந்து பல்வேறு முக்கியப் பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து சி.எஸ். வைத்தியநாதன், கபில் சிபல், கே.கே. வேணுகோபால், ப. சிதம்பரம், அருண் ஜெட்லி, டி.ஆர். அந்தியார்ஜுனா உள்ளிட்ட நாட்டின் புகழ்பெற்ற பல மூத்த சட்ட வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
ஏ.ஓ.ஆர் தேர்ச்சி: 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற கடினமான உச்ச நீதிமன்றப் பதிவு - வழக்கறிஞர் (Advocate-on-Record) தேர்வில் தேர்ச்சி பெற்று, உச்ச நீதிமன்றம், தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஆகியவற்றில் தனித்துவமாக வாதிடத் தொடங்கினார்.
அரசு வழக்கறிஞர் பணி: அரசியலமைப்புச் சட்டம், ஊழல் தடுப்பு, போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (NDPS), குற்றவியல் சட்டம் மற்றும் சேவைச் சட்டம் தொடர்பான முக்கிய விவகாரங்களில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வழக்கறிஞராகவும் (Panel Counsel) பணியாற்றியுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து: சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் சிறந்த நடுநிலை அறிவுரையாளராகச் செயல்பட்ட இவரின் திறமையைப் பாராட்டி, கடந்த 2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முழுச் சிறப்பு அமர்வு (Full Court) இவருக்கு 'மூத்த வழக்கறிஞர்' (Senior Advocate) அந்தஸ்தை வழங்கி கௌரவித்தது.
வரலாற்றுச் சாதனை: நீதித் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வி. மோகனா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கவுன்சிலிலிருந்து (Bar) நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண்மணி என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இவருடைய வழிகாட்டியான இந்து மல்ஹோத்ரா மட்டுமே நேரடியாகப் பார் கவுன்சிலிலிருந்து நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் சாதாரண வழக்கறிஞராகப் பயணத்தைத் தொடங்கி, இன்று நாட்டின் உச்சபட்ச நீதி பரிபாலன அமைப்பின் நீதிபதி நிலைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள வி. மோகனா, இளம் மற்றும் முதல் தலைமுறை வழக்கறிஞர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா அறிவிப்பு: டி.கே. சிவகுமார் நாளை பதவியேற்பு!
வியாழன் 28, மே 2026 12:44:09 PM (IST)

மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: மத்திய நிதியமைச்சரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை!
வியாழன் 28, மே 2026 10:18:41 AM (IST)

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு: தமிழகத்தின் திட்டங்கள் குறித்து கோரிக்கை!
புதன் 27, மே 2026 5:15:56 PM (IST)

மகள் நிறுவனப் பணமோசடி விவகாரம்: பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை!
புதன் 27, மே 2026 11:45:58 AM (IST)

நூறு விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ சவால்!
செவ்வாய் 26, மே 2026 12:53:57 PM (IST)

ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி: ஜனநாயகம் வென்றதாக பிரதமர் நெகிழ்ச்சி!
திங்கள் 25, மே 2026 5:30:51 PM (IST)


