» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!
சனி 2, செப்டம்பர் 2023 3:54:52 PM (IST)

முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு தயாராக இருக்கிறார் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் கலைஞர்; நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பிரம்மநாயகம் வரவேற்புரையாற்றினார்.
முகாமினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து பேசுகையில்: முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்;. அதனடிப்படையில் தூத்துக்குடி கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் கோட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
மாற்றுத்திறனாளிகளின் இயலாமைக்கு ஏற்றவாறு உபகரணங்கள் வழங்கப்படும். முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 பெற்றவர்களுக்கு ரூ.1200ஆகவும், ரூ.1500 பெற்றவர்களுக்கு ரூ.2000ஆகவும் உயர்த்தியுள்ளார்கள். மேலும், 90 சதவீதம் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் பெற்றோர்களுக்கும் உதவித் தொகை வழங்கும் வகையில் ரூ.2000 உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கூடுதலாக சேர்த்து ரூ.3000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
ஒன்றிய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை நமது மாவட்டத்தில் 28000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை பெறாதவர்களும், ஆதார் அட்டை பெறாதவர்களும்; முகாமில் பதிவு செய்து பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், நலவாரிய திட்டத்தின் கீழ் விபத்து மரண உதவித்தொகை ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம், இயற்கை மரண உதவித்தொகை 10 பயனாளிகளுக்கு தலா ரூ.17000 வீதம் மொத்தம் ரூ.1.70 இலட்சம், 8 பயனாளிகளுக்கு ரூ.54720 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 10 பயனாளிகளுக்கு ரூ.1,35,000ஃ- மதிப்பில் திறன்பேசிகள் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.4,59,720ஃ- மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் கலைஞர் தான், மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரியம் அமைத்து மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்தார். 10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்து கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஈமக்கிரியை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளை பெற்று பயனடையலாம். நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு கை, கால்களுக்கான உறைகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், செயற்கை கால், கை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக ஜெய்ப்பூரில் உள்ள நிறுவனம் மூலம் தயாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முகாம் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
குழந்தைகள் அந்தந்த வயதில் தவழ்தல், நடத்தல் போன்ற செயல்கள் செய்யாவிட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதிக்க வேண்டும். குறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் அதனை சரிசெய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு வளர்ந்துள்ளது. காது கேட்காமல் இருந்தாலும் நவீன தொழில்நுட்பம் மூலம் சரிசெய்யப்படும். இந்த முகாமில் பொதுமருத்துவம், கை, கால் முடியாதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பரிசோதனை செய்வதற்கு மருத்துவர்கள் வந்துள்ளார்கள்.
மாற்றுத்திறனாளிகள் வங்கிகளில் கடன் பெறுவதற்கான முன்பணத்தை தமிழ்நாடு அரசே செலுத்துகிறது. அரசின் திட்டங்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயனடைய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு தயாராக இருக்கிறார்கள், என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
முகாமில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில்: கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம்களை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் ஒவ்வொரு துறை மூலமும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்கும் முகாம், மருத்துவத்துறை மூலம் மருத்துவ முகாம், வேளாண் துறை மூலம் முகாம்கள் ஆகியவை நடத்தப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் அரசின் திட்டங்களை பெறுவதற்கு அடையாள அட்டை மற்றும் தேசிய தனித்துவ அடையாள அட்டை தேவைப்படும். அடையாள அட்டைகள், சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகள் என அனைத்தும் ஒரே இடத்தில் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவத்துறையினர், வருவாய்த்துறையினர், ஆதார் அட்டை எடுப்பவர்கள் வந்துள்ளார்கள். நீங்கள் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தால் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன.
இதனால் நீங்கள் எந்த ஊருக்கு சென்றாலும் உதவித்தொகை தடையின்றி பெற முடியும். ஆதார் எண் இணைக்கும் முகாம்கள் நமது மாவட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. இதில் விடுபட்டவர்கள் இந்த முகாமில் இணைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு தேவையான அரசின் திட்டங்களை பெற்றுத்தருவதற்கு மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த முகாமினை அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
முகாமில் பேச்சு பயிற்சியாளர் ராஜேஸ்வரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், துணை தலைவர் ஜுடி ஜீவன்குமார், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், தாசில்தார் ஜான்சன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், முத்துமாரி மற்றும் அல்பர்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு மற்றும் குளிர்பானம் ஆகியவற்றையும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

ஜெயக்குமார்Sep 3, 2023 - 07:38:04 PM | Posted IP 172.7*****