» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆட்சியரைக் கண்டித்து மறியல்: பொதுமக்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு!

திங்கள் 4, டிசம்பர் 2023 3:52:00 PM (IST)



தென்காசி மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் மற்றும் கக்கன் நகரில்  தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் சுமார் 15 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.  தங்களுக்குரிய இடத்தை கழிப்பிடம் என்று கூறிய தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சங்கரன்கோவில் நகராட்சியை கண்டித்து இன்று காலை நேரடித் திடலில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்தனர். 

மேலும் காந்திநகர் மற்றும் கக்கன் நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள், விவசாயிகள் தங்கள் வேலைகளை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கழுகுமலை சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இந்நிலையில்  காந்திநகர் பொட்டல் மைதானத்தில் கக்கன் நகர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 14 ஊர் நாட்டாமைகள் தலைமையில்  ஏராளமான பொதுமக்கள் கூடினர்.  கூடிய பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.  ஊர்வலமாக செல்ல முயன்ற பொதுமக்கள் செல்ல முடியாதபடி கழுகுமலை சாலையில் போலீசார் தடுத்தனர்.  அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  தள்ளுமுள்ளு போராட்டம் 45 நிமிடம் தொடர்ந்து  நடைபெற்றது.  இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில் காந்திநகர் மற்றும் கக்கன் நகரை சேர்ந்த பொதுமக்கள் குமரன் தெரு, பழைய தாலுகா ஆபிஸ் வழியாக கச்சேரி ரோட்டை வந்தடைந்தனர். அப்போது போலீசார் கழுகுமலை ரோடு, பழைய தாலுகா அலுவலகம் முன்பு பேரிகார்ட் அமைத்து தடை விதித்தனர். அந்தத் தடையை மீறி ஏராளமான பெண்கள், ஆண்கள் ஊர்வலமாக தேரடி திடலுக்கு வந்தடைந்தனர். தேரடி திடலில் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ், புதிய தமிழகம் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராசையா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள். நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 1:30 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

போராட்டத்தை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சங்கரன்கோவில் நகரில் முகாமிட்டு பொதுமக்களின் போராட்டத்தை கண்காணித்தார். பொதுமக்களின் 3 மணி நேர போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பஸ்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டது.

போராட்டக் குழுவினரின் மனிதநேயம்

சங்கரன்கோவில் தேரடி திடலில் பஸ்கள் செல்ல முடியாத அளவிற்கு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இடத்தின் அருகே அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது அப்போது கர்ப்பிணி பெண்கள் இருவர் ஆஸ்பத்திரி செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் அரசு ஆம்புலன்ஸ்களில் வந்தனர்.  அவர்களுக்கு இளைஞர்கள் ஆஸ்பத்திரி செல்வதற்காக தனியாக பாதையை ஒதுக்கி கொடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory