» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உதயகுமாருக்கு 3 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட் : உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 7, டிசம்பர் 2023 7:55:26 PM (IST)

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாருக்கு 3 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக என் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 213 வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த வழக்குகளால் எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தேன். அந்த வழக்கில் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை திரும்ப பெற பரிசீலிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் வழக்குகள் திரும்ப பெறப்படவில்லை. பின்னர், கடந்த ஆண்டு ஒரு வருடம் மட்டும் செல்லத்தக்க தற்காலிக பாஸ்போர்ட் எனக்கு வழங்கப்பட்டது. இந்த பாஸ்போர்ட் மூலம் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். 

எனவே, வெளிநாடு செல்ல ஏற்ற வகையில், 10 வருடத்துக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க விண்ணப்பித்து இருந்தேன். ஆனால், என் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணமாக சொல்லி, பாஸ்போர்ட் வழங்க முடியாது என மறுத்துவிட்டனர். அனைத்து குடிமக்களுக்கும் வழங்கும் பாஸ்போர்ட்டை எனக்கு மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தனி நபர் சுதந்திரத்தை பாதித்துள்ளது. எனவே, எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரர் ஒரு சமூக ஆர்வலர். அணு உலைக்கு எதிராக போராடுபவர். எனவே, அவருக்கு 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory