» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாட்டு வெடிகுண்டை கடித்த பசுமாட்டின் வாய் சிதறியது: போலீசார் தீவிர விசாரணை

செவ்வாய் 22, ஜூலை 2025 8:20:20 AM (IST)

கடையநல்லூரில் நாட்டு வெடிகுண்டை உணவு என கடித்த பசுமாட்டின் வாய் சிதறியது. குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்த மர்மநபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திரிகூடபுரம் பசும்பொன் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் வீட்டில் வளர்க்கும் பசுமாடு ஒன்று அந்த பகுதியில் மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது தரையில் இருந்த நாட்டு வெடிகுண்டை உணவு என மாடு கடித்துள்ளது. இதனால் திடீரென அந்த குண்டு வெடித்ததால் பசுமாட்டின் வாய்ப்பகுதி சிதறி துடித்தது.

இதுகுறித்து தகவலறிந்த சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடையார் சாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், யாரோ காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக குடியிருப்பு பகுதி அருகில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்திருக்கலாம் என்றும், அதை மாடு கடித்ததால் வெடித்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் துறை அலுவலர் ஆனந்தி, வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் விரைந்து வந்தனர். மற்ற பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்று தேடினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இதன் முடிவில் அங்கிருந்த மேலும் 3 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க செய்தனர். குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கிடந்த நிலையில், அதனை குழந்தைகளோ, பெரியவர்களோ தவறுதலாக எடுத்தபோது வெடித்தால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்த மர்மநபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory