» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் ரூ.423.13 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் : சபாநாயகர் ஆய்வு!

செவ்வாய் 22, ஜூலை 2025 3:14:09 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.423.13 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் களக்காடு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (22.07.2025) ரூ.423.13 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளுக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில் வள்ளியூர் திசையன்விளை பணகுடி ஆகிய பேரூராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நான்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு நகராட்சி மற்றும் நான்குநேரி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, பேரூராட்சிகள் மற்றும் இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வடக்கு வள்ளியூர், திசையன்விளை, பணகுடி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு ரூ. 423.13 கோடிக்கு தாமிரபரணி நதியை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

எதிர்காலத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டத்தில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்டு மக்கள் தொகையானது அடிப்படை வருடம் 2037ல் 1,79,320, இடைக்கால வருடம் 2037ல் 2,10,090 மற்றும் உச்சகட்ட வருடம் 2052ல் 2,44,760 எனவும் கொள்ளப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தாமிரபரணி நதியில், சேரன்மகாதேவி அருகில் அமைக்கப்பட்டுள்ள 8.00 மி.மீ விட்டமுள்ள கிணற்றிலிருந்து நதிநீர் எடுக்கப்பட்டு அங்கிருந்து 9.06 கி.மீ தொலைவிலுள்ள கங்கனாங்குளம் அருகிலுள்ள, திருவிருந்தாள்புளி கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் நீர் 31.67 MLD சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கபட்டு மின் மோட்டார்கள் மூலம் ஊந்தப்பட்டு, பின் நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் அமையவுள்ள தரைமட்ட குடிநீர் சேகரிப்பு தொட்டிகள் மூலம் சேமிக்கப்பட்டு, பின் நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் ஏற்கனவே அமைந்துள்ள மேல்நிலைத் தொட்டிகள் – 38 எண்ணம் மற்றும் புதிய மேல்நிலைத் தொட்டிகள் – 24 எண்ணம் வாயிலாக புதிதாக பதிக்கப்படவுள்ள பகிர்மான குழாய்கள் 521.68 கி.மீ மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. இக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் 49417 வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தற்போது வரை 75% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, இத்திட்டமானது 11 / 2025 –யில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் திட்ட பணிகளுக்கு வள்ளியூர் திசையன்விளை பணகுடி ஆகிய பேரூராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், முழு ஒத்துழைப்புடன் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குடிநீர் திட்டப்பணிகளை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், தலைமை பொறியாளர் கணேசன், நிர்வாகப் பொறியாளர் தயாளன் மோசஸ், உதவி நிர்வாகப் பொறியாளர் பாக்கியராஜ், ஆசிக், திட்ட மேற்பார்வையாளர் விஜயகுமார், வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், பணக்குடி பேரூராட்சி தலைவர் தனலெட்சுமி தமிழ்வாணன், வள்ளியூர் துணைத்தலைவர் கண்ணன், பணக்குடி துணைத்தலைவர் புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி சுயம்பு உட்பட அரசு அலுவலர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory