» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய மின்பரிமாற்ற அமைப்பு: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

ஞாயிறு 27, ஜூலை 2025 12:36:41 PM (IST)



தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.4,900 கோடியில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய மின்பரிமாற்ற அமைப்புக்கு அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி வாகைகுளத்தில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று இரவில் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.அதாவது, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.285 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு சரக்கு தளம் 3-ஐ தொடங்கி வைத்தார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலை 36-ன் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பிரிவின் நான்குவழிச்சாலை, 138-ன் தூத்துக்குடி துறைமுக சாலை பிரிவின் ஆறுவழிச்சாலை ஆகிய ரூ.2,557 கோடி மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட சாலைவசதி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ரயில்வே துறை சார்பில் நாகர்கோவில் டவுன்-நாகர்கோவில் சந்திப்பு- கன்னியாகுமரி பாதையை இரட்டிப்பாக்குதல், ஆரல்வாய்மொழி- நாகர்கோவில் சந்திப்பு மற்றும் நெல்லை- மேலப்பாளையம் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல், மதுரை-போடிநாயக்கனூர் ரயில் பாதையை மின்மயமாக்குதல் ஆகிய ரூ.1,032 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதுதவிர தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலைய அலகு 3, 4-ல் இருந்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கான ரூ.548 கோடி செலவில் 2 ஜிகாவாட் சுத்தமான மற்றும் நிலையான எரிசக்தி மின்பரிமாற்ற அமைப்புக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நேற்று ஒட்டுமொத்தமாக தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.4,900 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை திறந்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory