» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆணவ படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் அவசியம்: ஆணையத் தலைவர் ச.தமிழ்வாணன்

வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 5:11:09 PM (IST)



நெல்லையில் கவின் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் ச.தமிழ்வாணன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (01.08.2025) ஆறுமுகமங்கலம் கிராமம் பட்டியல் இனத்தை சேர்ந்த கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தலைவர் முனைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் தலைமையில், துணைத் தலைவர் இமயம் (வெ.அண்ணாமலை), ஆணைய உறுப்பினர்கள் செ.செல்வக்குமார், முனைவர் சு.ஆனந்தராஜா, பொ.இளஞ்செழியன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், முன்னிலையில் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தலைவர் முனைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் தெரிவித்ததாவது:-
திருநெல்வேலியில் நடைபெற்ற கவின் செல்வகணேஷ் கொலை சம்பவம் மிகவும் துயரமான சம்பவம். அரசியலமைப்பு சட்டத்தின் படி 18 வயது நிரம்பிய பெண், 21 வயது நிரம்பிய ஆண் திருமணம் செய்வதற்கான உரிமை உள்ளவர்கள். ஆணவ கொலைகள் மனித சமுதாயத்திற்கு எதிரானது. இந்த சம்பவம் ஜாதிய கண்ணோட்டம் இல்லை, ஆனால் இந்த சம்பவம் மிகவும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த கொலை சம்பவத்தை காவல்துறையும் வருவாய் துறையும் முறைப்படி அணுகி முறையான விசாரணையை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சட்டத்தின் படி இந்த விவகாரத்தில் செய்ய வேண்டியது அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பிரச்சனைகளை சாதிய பிரச்சனைகளாக மட்டும் பார்க்காமல் சமூகத்திற்கான பிரச்சனையாகவே பார்க்க வேண்டும் சமூக நீதி காக்கப்பட வேண்டும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதிகள் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆணையம் எதிர்பார்த்ததை காவல் துறையும் வருவாய் துறையும் சிறப்பாக செய்து வருகிறார்கள் அவர்களது நடவடிக்கை திருப்தி அளிக்கிறது.

இது போன்ற தவறான செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த சம்பவத்தால் யாருக்கும் லாபம் இல்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களும் பாதிக்கப்படுகிறது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை படித்தவர்கள் இந்த விவகாரத்தை கைவிட்டு விடுவார்கள். 

ஆனால் ஒரு சிலர்கள் இதனை ஏற்க மறுத்து ஆணவக் கொலைகளை ஆதரிக்கின்றனர். ஆணவ படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் அவசியம் மத்திய மாநில அரசுகளை இந்த விவகாரம் தொடர்பான சட்டம் கொண்டு வருவதற்கு ஆணையம் அழுத்தம் கொடுக்கும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் ச.தமிழ்வாணன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், காவல் துணை ஆணையாளர் வினோத் சாந்தாராம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, காவல் துணை ஆணையர் விஜயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் காவல் உதவி ஆணையர் சுரேஷ் (பாளையங்கோட்டை), காவல் ஆய்வாளர் காசிபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory