» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் 109 வகையான உணவுகளுடன் நயினார் நாகேந்திரன் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 8:44:17 AM (IST)

நெல்லையில் நயினார் நாகேந்திரன் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு இரவு விருந்து நடந்தது. இதில் 109 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் நெல்லைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவில் அவர் நெல்லையில் உள்ள ஓட்டலில் தங்கினார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடையே இணக்கமும், தொண்டர்களிடையே நெருக்கமும் உருவாக்கும் வகையில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தனது சொந்த ஊரான நெல்லைக்கு வருகை தந்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று இரவு சிறப்பு விருந்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நேற்று இரவு 8.20 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு வந்தார். அங்கு நயினார் நாகேந்திரன் தலைமையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நயினார் நாகேந்திரன் வீட்டின் முதல் மாடியில் பா.ஜனதா -அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் 1 மணி நேரம் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் நடைபெற்ற தடபுடல் விருந்தில் எடப்பாடி பழனிசாமிக்கு 109 வகையான சைவ உணவுகள் பரிமாறப்பட்டது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க சார்பில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், ராஜலட்சுமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு விருந்தை நெல்லையில் உள்ள பிரபல தனியார் உணவு நிறுவனம் தயார் செய்து கொடுத்தது.
அந்த வகையில் ஸ்பானிஷ், சைனீஸ் வகைகளை உள்ளடக்கிய 4 வகையான சூப், தாய் மற்றும் இந்திய வகைகளை சேர்ந்த இரண்டு வகையான சாலட், இத்தாலியன், கொரியன், சைனீஸ், மற்றும் தென்னிந்திய வகைகளை உள்ளடக்கிய 9 வகையான ஸ்டார்டர்கள், 3 வகையான பார்பிக்யூ, 5 வகையான வடமாநில சாட், நெல்லையில் பிரசித்தி பெற்ற அல்வாவில் மூன்று வகைகளுடன் கூடிய 11 வகையான இனிப்பு வகைகள் இடம்பெற்றன.
மேலும் மூன்று வகையான போளி வகைகள், இரண்டு வகையான இட்லி, அம்மனி கொழுக்கட்டை, பூண்டு குழம்பு, சிவப்பு சம்பா இடியாப்பம், நெல்லை சொதி குழம்பு, கேரள புட்டு, குஜராத் டோக்ளா, நான்கு வகையான பஞ்சாபி டெல்லியின் பாரம்பரிய ரொட்டி வகைகள், பாரம்பரிய சிறு தானிய உணவுகள், எட்டு வகையான சாதங்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வகையான தொடி கறிகள், 14 வகையான தோசைகள், 6 வகையான அப்பளங்கள், சுக்கு பணங்கற்கண்டு பால், பில்டர் காபி, நன்னாரி பால், சர்வதேச வகைகளிலான பழ துண்டுகள், 17 வகையான ஐஸ்கிரீம், ஆரஞ்சு, மாதுளை, தர்பூசணி உள்ளிட்ட ஏழு வகையான ஜூஸ் வகைகள் என 109 உணவு பதார்த்தங்கள் தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டது.
இதில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நாராயண பெருமாள்,
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பால் கண்ணன், மாவட்ட பொருளாளர் வக்கீல் ஜெயபால், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் வீரபெருமாள், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வசந்தி முருகேசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கவுன்சிலர் சந்திரசேகர், மாநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காளி முருகன், மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் விஸ்வ கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக எச்.ராஜா நடிப்பில் தயாராகியுள்ள கந்த மலை திரைப்படத்தின் டீசரை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

மீட்கப்பட்ட ஆட்டோவை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக புகார்: எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:31:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)
