» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் 47,392 மாணவர்கள் பயன்: சபாநாயகர் தகவல்
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:37:45 PM (IST)

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினால் நெல்லை மாவட்டத்தில் 1014 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 47392 மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.08.2025) சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகரப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை செவன் டாலர்ஸ் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா, துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கி, அவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: பெருந்தலைவர் காமராஜர் பட்டித்தொட்டியெல்லாம் பள்ளிகளை திறந்து மதிய உணவுத்திட்டத்தினை கொண்டுவந்து, தமிழ்நாட்டில் மாபெரும் சாதனையை படைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் உள்ளத்தோடு தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து நிலையினை உயர்த்தவும், குறிப்பாக இரத்த சோகை குறைபாட்டினை நீக்கவும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகையினை அதிகரிக்கவும் மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும் காலை சிற்றுண்டி திட்டத்தினை கொண்டுவந்து, இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் சாதனைப் படைத்துள்ளார். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தினை உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உள்ளது. இத்திட்டத்தினை பார்த்து, கனடா நாடும், இந்தியாவில் தெலுங்கானாவும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. உலகத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் முதற்கட்டமாக திருநெல்வேலி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 22 அரசு பள்ளிகளில் பயிலும் 2658 மாணவர்களுக்கு 16.09.2022 முதல் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள 18 அரசுப்பள்ளிகளில் பயிலும் 974 மாணவ மாணவியர்களுக்கு 01.03.2023 முதல் விரிவுபடுத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாக ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள 348 அரசுப்பள்ளிகளில் பயிலும் 14420 மாணவ மாணவியர்களுக்கு 25.08.2023 முதல் விரிவுபடுத்தப்பட்டது. நான்காம் கட்டமாக ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள 416 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 16225 மாணவ மாணவியர்களுக்கு 15.07.2024 முதல் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது ஐந்தாம் கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைத்தொடர்ந்து, இன்றையதினம் திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி பகுதிகளில் அமைந்துள்ள 210 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 13,115 மாணவ மாணவியர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் வாயிலாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், திங்கள் கிழமை அன்று வெண்பொங்கல் + காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை அன்று ரவா / சேமியா / சோள / கோதுமை ரவா காய்கறி கிச்சடி + காய்கறி சாம்பார், புதன் கிழமை அன்று வெண்பொங்கல் + காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அன்று சேமியா/ ரவா / கோதுமை ரவா உப்புமா/ வெண்பொங்கல் + காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை அன்று ரவா / சேமியா / சோள / கோதுமை ரவா காய்கறி கிச்சடி + காய்கறி சாம்பார் என காலை சிற்றுண்டி உணவுகள் வழங்கப்படவுள்ளது.
நமது திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட 1014 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 47392 மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு பிரிவு) தா.அருணாதேவி, பாளையங்கோட்டை செவன் டாலர்ஸ் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி.ரோசரி, மண்டலத்தலைவர் பிரான்சிஸ், மாமன்ற உறுப்பினர்கள் பேச்சியம்மாள், சுப்புலெட்சுமி, மரு.சங்கர், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், முக்கிய பிரமுகர் சித்திக், பரமசிவ ஐயப்பன் உட்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:30:32 AM (IST)

கல்லூரி பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருட்டு : வேலைக்கார பெண் உள்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:28:01 AM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)

கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:07:40 PM (IST)




