» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)



நெல்லையில் வாலிபர் மீது போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார் ஏற்றிய வீடியோ வைரலான நிலையில், அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சாலையில் கிடந்த தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார்.

உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார். 

அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட காந்தி ராஜன் மீது துறைரீதியாக நடவடிக்கை பாயுமென தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து

BabuSep 19, 2025 - 06:15:41 PM | Posted IP 172.7*****

apo makkaluku mattum yen punishment avangalukum vera thanadanai kudukalame

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory