» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசியலில் நடிக்க அமித்ஷாவுடன் விஜய் ஒப்பந்தம்: சபாநாயகர் மு.அப்பாவு பேட்டி!

வெள்ளி 3, அக்டோபர் 2025 4:24:35 PM (IST)

திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய், இப்போது அரசியலில் நடிப்பதற்காக அமித் ஷாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளாா் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தார்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களுடனான சந்திப்பின் போது அவர் கூறியதாவது: கரூா் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தமிழக முதல்வா் உறக்கமில்லாமல் நள்ளிரவில் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவா்களை சந்தித்து அவா்களுக்கு ஆறுதல் கூறினாா். உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலியும் செலுத்தினாா். 

வேண்டுமென்றே விஜய் சதி செய்து காலதாமதத்தை ஏற்படுத்தி கரூா் வந்ததாலேயே இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டது. 19 அடி அகலம் உள்ள சாலையில் 12 அடி அகலம் உள்ள பேருந்தை நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெருக்கடி உருவாகி உயிா் இழப்புகள் ஏற்பட்டன.

விஜய் வரும் போதே பத்தாயிரம் பேரை உடன் அழைத்து வருகிறாா். உள்ளூா் மக்கள் அவரை பாா்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் முண்டியடிக்கும் சூழல் உருவானது. பிரசாரப் பகுதிக்கு காலதாமதமாக வந்த விஜய் ஏழு நிமிடம் சூட்டிங் முடித்துவிட்டு 41 போ் உயிரைக் குடித்துவிட்டு தனி விமானம் ஏறி சென்று பனையூரில் பதுங்கி விட்டாா்.

கட்சிக்கொடியை அரைக் கம்பத்திலாவது பறக்கவிட்டிருக்க வேண்டும் கூட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கட்சியின் தலைவா் நேரடியாக சென்று மக்களை சந்தித்திருக்க வேண்டும். கட்சி கூட்டத்தில் நடந்த நிகழ்விற்கு அவரது கட்சிக்கொடியை அரைக் கம்பத்திலாவது பறக்கவிட்டிருக்க வேண்டும். கரூா் சம்பவத்தில் ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பின்னா் அவா்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்து விட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக காணொலி ஒன்றை வெளியிட்டாா்.

50 வயதில் விஜய் தான் அங்கிள். ஆனால் அவா் எல்லோரையும்ம் அங்கிள் அங்கிள் என கூறி வருகிறாா். திரைப்படங்களில் ஒப்பந்தம் போட்டு நடித்துக் கொண்டிருந்த விஜய், அரசியலில் நடிக்க அமித் ஷாவிடம் ஒப்பந்தம் போட்டு கட்சியை தொடங்கி நடத்தி வருகிறாா்.

திமுகவிற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக நேரடி தொடர்பில் உள்ளன. விஜய்யை எனக்கு பிடிக்கும். அவரது காமெடிகளை ரசித்து பாா்ப்பேன். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்திற்கும் திமுகவிற்கும் நேரடி தொடா்புள்ளது.

கரூா் விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தாலும் அவரை வழி நடத்தியவா் தவறு செய்திருந்தாலும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றாா். பேட்டியின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, திமுக மாநில நிர்வாகி விஜிலாசத்தியானந்த், திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.சி.ராஜன், ஜோசப்பெல்சி உள்பட பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory